News

பிரதமர் ஹரிணி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்  உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆரஞ்சு நிற ஆடையுடன் பாராளுமன்றம் வருகை

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (25) செம்மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.
.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அதற்குத் தமது ஆதரவை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளற்ற ஒளிமயமான எதிர்காலத்தை செம்மஞ்சள் நிறம் குறிக்கின்றதுடன், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை ஊக்குவிக்க உலகளாவிய ரீதியில் இந்த நிறம் பயன்படுத்தப்படுகின்றது.
.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகள் குறித்தும் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
.
மனித உரிமைகள் தினத்துடன் இணைந்து எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி நிறைவடையவுள்ள ‘பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டுப் பிரச்சாரத்தின்’ ஒரு பகுதியாக, “இது எனது உரிமை” எனும் தொனிப்பொருளின் கீழ் தொடர் பொது விழிப்புணர்வுத் திட்டங்களையும் விழிப்புணர்வுப் பேரணியொன்றையும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான இலங்கைப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன், ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கை அலுவலகத்துடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
.
ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளுக்கு அமைய, உலகளாவிய ரீதியில் மூன்று பெண்களில் ஒருவர் தமது வாழ்நாளில் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்கின்றார் என்பதுடன், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகின்றது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button