முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இன்று வெளியான நீதிமன்ற உத்தரவு
கூட்டுறவு மற்றும் உள் வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணையை ஜனவரி 21 ஆம் திகதி நடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.
2014 ஜனவரி 1 முதல் 2014 டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் 39 ஊழியர்களை வழமையான கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மூன்று பிரதிவாதிகள் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சதொச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ, சதொச முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் காஜா மொஹிடின் சாகீர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.