மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து குடும்பத்தினர் வெளியேறாமல் இருந்த நிலையில் அங்கு மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இறப்பதற்கு முன்னர் வழங்கப்பட்டு இருந்த அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது
இந்த வீட்டை உடனடியாக கையளிக்குமாறு சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பெரேராவிற்கு பல முறை தெரிவித்த போதிலும், அவர் தொடர்ந்தும் வீட்டைக் கையளிக்க மறுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.
இதேவேளை, உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான வீட்டு வாடகையை கூட அவர் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமை காரணமாக குறித்த வீடுகளை வழமையான முறையில் கையகப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அமைச்சின் அதிகாரிகளுக்கு அந்த விடயங்களில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை எனவும் பொது நிர்வாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உத்தியோகபூர்வ இல்லம் தவிர்ந்த ஏனைய முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து வீடுகளும் கையளிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.