இன்று முடியாது – எதிர்வரும் 18 முதல் 25ஆம் திகதிக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வர முடியும் என பிள்ளையான் CID யினருக்கு கடிதம் அனுப்பினார்
முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதிக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வரமுடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தினத் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 ஊடகத்திற்கு அவரது முன்னாள் செயலாளரான ஆசாத் மௌலானா உண்மைகளை முன்வைத்தமை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காகவே இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.