நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரானவர்கள் அல்ல ; இலங்கைத் தமிழரசுக் கட்சி
நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பானவர்கள் அல்லர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அலையாக அல்லது சுனாமியாக இந்த முறை வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது. இந்தக் கட்சி மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருக்கின்றது. இந்தக் கட்சியில் யாழ்ப்பாணத்திலும், ஏனைய இடங்களிலும் சிலர் தெரிவு செய்யப்பட்டும் உள்ளனர்.
ஆகவே, நாங்கள் கட்சி சார்ந்து அல்லது கொள்கை சார்ந்து சொல்லக்கூடிய விடயம் என்னவென்றால் அநுர தரப்பினர் முன்னைய காலத்தில் 13 ஆவது திருத்தத்துக்கும் மாகாண சபை முறைமைக்கு எதிராகவும் போராடியவர்கள். ஆனால், இப்போது தமிழ் மக்கள் அதனை விரும்புவதாலும், புதிய அரசமைப்பைக் கொண்டு வரவுள்ளதாலும் அந்த முறைமை அப்படியே இருக்கட்டும் என்றவாறான மாற்றமொன்று அவர்களிடத்தே ஏற்பட்டிருக்கின்றது.
அன்று அநுர தரப்பு எதிராக நின்றாலும் இப்போது மாற்றம் வந்துள்ளது. அந்த மாற்றம் என்பது தமிழ் மக்களின் அனைத்து விடயங்களிலும் ஏற்பட வேண்டும். ஆகையினால் நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் உங்கள் அரசுக்கு எதிரானவர்கள் அல்லது எதிர்ப்பானவர்கள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம் என்றார்