பெண் ஒருவருடன் தகாத தொடர்பில் இருந்த இருவருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதால் ஒருவர் மற்றவரின் தலையை வேறாக வெட்டி எடுத்து புதைத்த சம்பவம் பதிவு #இலங்கை
கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹாமுதுருகந்த பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22) கழுத்து வெட்டப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொலை செய்யப்பட்டவர் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தணமல்வில பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து காணாமல் போன நபர் கொஸ்லந்த பிரதேசத்தில் உள்ள வனப்பகுதி ஒன்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணையின்போது, கொலை செய்யப்பட்டவர் இறுதியாக வேறொரு நபருடன் ஹாமுதுருகந்த பகுதிக்குச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கொலை செய்யப்பட்டவருடன் சென்ற பலஹருவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் கொலை செய்யப்பட்டவரின் கழுத்தை வெட்டி அதனை புதைத்து சடலத்தை மாத்திரம் வனப்பகுதியில் வீசியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவரும் சந்தேக நபரும் ஊவா குடா ஓயா பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஊவா குடா ஓயா பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்