News

“கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நீதிமன்ற வளாகத்தினுள் கொலை இடம்பெற்றது பலத்த கேள்விகளை எழுப்புகிறது”

“கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நீதிமன்ற வளாகத்தினுள் கொலை இடம்பெற்றது பலத்த கேள்விகளை எழுப்புகிறது”

சமூக நீதிக் கட்சி

இன்று (19.02.2025) அளுத்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தினுள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அழைத்துவரப்பட்ட, பாதாள உலக குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதாகக் கருதப்படும் சந்தேக நபரான கனேமுல்ல சஞ்சீவ, சட்டத்தரணி போன்று வேடமிட்டு நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்த ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்பதும், குறித்த கொலையாளி, அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி தப்பிச் சென்றுள்ளார் என்பதும் எமக்குள் பலத்த கேள்விகளை எழுப்புகிறது.

இதே போன்று நேற்று மித்தெனியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளனர். நீதிமன்ற வளாகத்தினுள் இன்று கொல்லப்பட்ட பாதாள உலக குற்றச்செயல்களோடு தொடர்புபட்டதாகக் கருதப்படும் சந்தேக நபரான கனேமுல்ல சஞ்சீவ, கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் துணையோடு தான் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார் என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.  அதே போன்று நேற்று மித்தெனியவில் கொல்லப்பட்ட அருண விதானகமகே, தான் ராஜபக்ஷக்களின் குற்றச்செயல்களுக்கு துணை நின்றவர் என்றும், பின்னர் ராஜபக்ஷக்களினால் தனக்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன என்று கடந்த காலங்களில் நேர்காணல்களின் கருத்துத் தெரிவித்தவர். ஆகவே இந்த இரண்டு கொலைகள் குறித்தும் பின்வரும் விடயங்களை சமூக நீதிக் கட்சி அரசிற்கு சுட்டிக்காட்டுகிறது.

1. அரசியல் பின்னணி கொண்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் சட்டரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குறித்த குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நேரடிக் குற்றவாளிகள், அவர்களை மறைமுகமாக பின் நின்று இயக்கிய முக்கிய அரசியல்வாதிகள் என அனைவரும் தண்டிக்கப்படுவதனால் தான் இவ்வாறான பாதாள உலக குற்றச்செயல்களையும், அதனை வைத்து அரசியல் இலாபமடையும் அரசியல்வாதிகளின் திட்டங்களையும் முறியடிக்க முடியும். இப்படியிருக்க, இவ்விரு கொலைகளையும் அவதானிக்கும் போது, ஒரு அரசியல் தரப்பு தமது குற்றச் செயல்களின் தடயங்களை அழிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.

ஆகவே தொடர்ந்து அதிகரித்து வரும் இவ்வாறான கொலைச் சம்பவங்களையும் பாதாள உலக செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கைளை எடுக்க வேண்டும். இதன் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் அரசியல் தரப்பு முறையான விசாரணைகள் முலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

2. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி சட்டத்தரணி போன்று வேடமிட்டு நீதிமன்ற வளாகத்தினுள் ஒரு கொலையை நிகழ்த்திக்காட்டியிருக்கும் பின்னணியில் உள்ள குற்றவாளிகளின் செயற்பாட்டினால், இலங்கையில் நீதித்துறையையும் அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நம்பி நீதிமன்றத்தில் ஆஜராகும் சந்தேக நபர்களிடமும், குற்றச் செயல்களுக்கு எதிராக சாட்சியமளிக்க முன்வருபவர்களிடமும் தங்களது பாதுகாப்பு குறித்த பலத்த கேள்விகளை இந்தச் சம்பவம் எழுப்பும்.  இது ஈற்றில் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்க வல்லது.

ஆகவே நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் சந்தேக நபர்கள் மற்றும் சாட்சியமளிக்க முன்வருபவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3. நீதிமன்றத்தோடு தொடர்புபடும் நீதிபதிகள், சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்ட நபர்கள், சந்தேக நபர்கள், ஊடகவியலாளர்கள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என்று பலரது பாதுகாப்புக் குறித்த பலத்த கேள்விகளை இச்சம்பவம் எழுப்பியுள்ள படியினால், நீதிமன்ற வளாகத்தினுள் நுழையும் (சட்டத்தரணிகள் உட்பட) அனைவரையும் முறையாக பரிசோதனை செய்து, நீதிமன்ற வளாகத்தினுள் அனுமதிக்கும் ஒரு பொறிமுறை உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

– சமூக நீதிக் கட்சி.
19.02.2025.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button