News

ஆளுமை மிக்க அதிபர் பெருந்தகை

அந்த அதிகாலைப்பொழுதில் வானம் பன்னீர்துளிகளைத் தூவ, மண்ணின் வாசனை அந்த மருத நிலமெங்கும் படர்ந்தது; புள்ளினங்கள் தமது இனிய குரல்களின் ஒத்திசைவுடன் ஒரு வரவேற்பு கீதம் பாடலாயின; ஆற்றங்கரையில் தன்னந்தனியாக நின்றிருந்த மரத்தில் ஓரிரு இலைகள் புதிதாகத் துளிர்த்தன; உதய சூரியன் கீழ் வானில் தன் பொற்கரங்களைப் பரப்ப புல்நுனிப் பனித்துளிகள் மெல்ல மெல்ல அகன்று கொண்டிருந்தன; அந்த புலரிப்பொழுதில்தான் அன்னை மசூதா உம்மா தன் தலைமகன் பிறப்புக்காக நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தார்.

அந்தப் புதன்கிழமை அதிகாலையில் தல்கஸ்பிடிய ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளிவாயிலில் சுப்ஹ் தொழுகையை நடத்தி முடித்துவிட்டு வீடு திரும்பிய பள்ளி முஅத்தினார் மர்ஹூம் அமீர் சுல்தான் அவர்கள் அன்றைய தினம் பிறக்கப்போகும் தன் மூத்த ஆண்பிள்ளை இந்த ஊரின் தலையெழுத்தை மாற்றப் போகும் ஒரு பேர் சொல்லும் பிள்ளையாக, ஒரு மாபெரும் கல்வி ஆளுமையாக மிளிரக்கூடும் என்று கனவிலேனும் நினைத்துப் பார்த்திருப்பாரா?

1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி புதன்கிழமை அமீர் சுல்தான் – மசூதா உம்மா தம்பதியருக்கு மகனாக தல்கஸ்பிடிய மண்ணில் பூவுலகின் வெளிச்சம் காண்கிறார் நம் கதையின் நாயகன். ஆறு பிள்ளைகளைக்கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாகப் பிறந்த அவர் ஜாபிர் எனப் பெயரிடப்படுகிறார்.

சிறுவன் ஜாபிரின் தகப்பனார் அமீர் சுல்தான் அவர்கள் கல்வியின் அருமை குறித்து நன்கறிந்திருந்தவர். அல் அஷ்ரக் அரசினர் பாடசாலையின் முதல் மாணாக்கர் என்ற பெருமையும் அவருக்குண்டு. ஒரு பள்ளி முஅத்தினாராக சொற்ப வருமானத்துடன் வறுமையில் உழன்றாலும் தன் பிள்ளைகளுக்கு அழியாச்செல்வமான கல்விச்செல்வத்தை முதுசமாக வழங்கிட விரும்பியவர் அவர்.

ஆறாம் வயதை அடைந்த போது சிறுவன் ஜாபிர் சிறிய தோள்களில் புத்தகப்பையை சுமந்தவாறு, உற்சாகமும் உள்ளச்சமும் ஒருசேரக் கலந்து, வாழ்வில் முதன்முறையாக பாடசாலையின் வாசலை அடைகிறார். சிற்றடிகள் வைத்து வகுப்பறை நோக்கிச் செல்ல, அவரது அறிவுப் பயணத்தின் முதல் அத்தியாயம் ஆரம்பமாகிறது.

இளமையில் வறுமை அவரை வாட்டினாலும், எப்போதுமே அவர் கண்களில் அறிவுத்தேடலில் ஒளிரும் ஒரு தீபம் தெரியும். பள்ளியில் ஆசிரியர் விளக்குவதை உற்று கவனிக்கும்போது அவன் கண்களில் தோன்றும் அந்த ஒளியே வெற்றி இலக்கின் வெளிச்சப்பிரவாகம்!

இத்தகைய பின்னணியில் பல்வேறு சவால்களுடன் கல்வியைத் தொடர்ந்த அவர் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைகிறார். கணிதப் பிரிவில் உயர் தரம் கற்க வேண்டும். ஆலோசனை சொல்ல பலர் இருந்தாலும் உதவ யாரும் இருக்கவில்லை. அயலூர் பாடசாலைகளிலும் உயர் தரக் கணித வகுப்புகள் கிடையாது. எனவே, மாத்தளை சாஹிரா கல்லூரியில் தன் உயர்தரக் கற்றலை ஆரம்பிக்கிறார். தன் கல்வித் தேடலுக்கான களம் அங்கே அமையவில்லை எனக் கண்ட இளைஞர் ஜாபிர் தன் கல்விக்காக  கண்டி சில்வெஸ்டர் கல்லூரியை தெரிவு செய்துகொள்கிறார். ஒழுங்கான போக்குவரத்து வசதிகள் இல்லாத தல்கஸ்பிடியவிலிருந்து கண்டிக்கு செல்வது என்பது அந்தக்காலத்தில் ஒரு பெரும் சவாலாக இருந்த நிலையில் குருந்துகொல்லவில் உள்ள உறவினர் சுபைர் மாமா வீட்டில் சில காலமும் கண்டியில் நண்பர் வீட்டில் சில காலமும் தங்கியிருந்து கல்லூரி செல்கிறார். உயர் தரத்திலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றாலும் பல்கலைக்கழக வாய்ப்பு நூலிழையில் நழுவிப்போகிறது.
குடும்பச் சூழ்நிலை அவரை தொழில் செய்யத் தூண்டுகிறது. இதனால் கலேவெல நகரில் உள்ள தன் மைத்துனரின் கடையில் பணியாற்றுகிறார்.

இந்த நிலையிலேயே அவருக்கான இன்னொரு வாய்ப்பு ஆசிரியர் போட்டிப் பரீட்சை வடிவில் வருகிறது. அநேகமாக கல்வித் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த ஒரு கருவியாக அல்லாஹ் அவரை தேர்ந்தெடுத்திருக்கலாம்.
பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர் ஜாபிர் 1987 டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி கணிதப் பாட ஆசிரியராக மடிகே மிதியால பாடசாலையில் காலடி எடுத்து வைக்கிறார். பின்னர் பம்மன்ன அல் கமர் வித்தியாலயத்திலும், அதன் பின்னர் பறகஹதெனிய தேசிய பாடசாலையிலும் கணிதப்பாட ஆசிரியராக சேவையாற்றுகிறார். ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர் மனம் வென்ற கணிதப்பாட ஆசிரியராகவும், சீரான சமூகம் ஒன்றை உருவாக்கும் பொறுப்பை சுமந்த கண்டிப்பான ஆசிரியராகவும் தனது ஆளுமையை செதுக்கிக் கொள்கிறார்.

இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  16 ஆம் திகதி மணவாழ்வில் இணைகிறார். அவரின் வாழ்க்கைத் துணைவியாகும் பாக்கியம் பெற்றவர் மாத்தளை மாவட்டத்தின் மாதிபொல பிரதேசத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியையான ரிஸானா அவர்கள்.

சமகாலத்திலேயே கல்வியியல் பட்டத்தினையும் பூர்த்தி செய்த ஜாபிர் ஆசிரியர், 2005 ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மகா வித்தியாலயத்துக்கு இடமாற்றம் பெற்று வருகிறார். குறுகிய காலத்திலேயே – அதாவது 2006 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி – அல் அஷ்ரக் மகா வித்தியாலயத்தின் அதிபர் பதவி அவரைத் தேடி வருகிறது.
400 இற்கும் குறைவான பிள்ளைகளோடு உயர் தரத்தில் கலைப் பிரிவுடன் மட்டும் இயங்கிய, தேசிய மட்டப் பரீட்சைகளின் குறைவான அடைவு மட்டங்களைப் பெற்றிருந்த ஒரு பாடசாலையின் நிர்வாகத்தை அவர் பொறுப்பேற்றபோது அது நாடே அறியும் ஒரு பாடசாலையாக மிளிரப்போகிறது என்பதை யாருமே எதிர்வுகூறியிருந்திருக்க மாட்டார்கள். 

பாடசாலையின் நிலைமையை துல்லியமாகக் கணித்த அவர், மெல்ல மெல்ல மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் உள்ள சவால்களை நீக்க ஆரம்பிக்கிறார். அலுவலக கதிரையில் அமர்ந்து ஆசிரியர்களிடம் வேலை வாங்காது நேரடியாக வகுப்பறைகளுக்குச் சென்று தானும் கற்பித்தலில் ஈடுபட்டு போதனா தலைமைத்துவத்தின் மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறார். கட்டிளமைப் பருவ மாணவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து அவர்கள் மனதில் கல்விக்கான விருப்பத்தையும் வேட்கையையும் விதைக்கிறார்.
பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்கிறார். பெளதிக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான பலவேறு முனைப்புகளில் ஈடுபடுகிறார்.

அவரது அயராது முயற்சிகளால்  புதிய கட்டடங்கள், நுழைவாயில், சுற்று மதில்கள், உள்ளக வழிகள் என பாடசாலைக்கு புது மெருகேறுகிறது.
கல்வி அடைவிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன. மாணவர்கள் பலர் சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் விசேட சித்திகளைப் பெற ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பின்னணியில் 2015 ஆம் ஆண்டில் உயர் தர வணிகப் பிரிவு ஆரம்பிக்கப்படுகிறது. 2017 ஆகஸ்ட் மாதம் பரீட்சைக்குத் தோற்றும் 9 மாணவர்களில் 4 பேர் முதல் தடவையிலேயே பல்கலைக்கழகம் செல்கிறார்கள். இந்த வெற்றியோடு 2018 ஆம் ஆண்டு பாடசாலை 1AB தரப் பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு உயர் தர பெளதிக, உயிரியல் விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்படுகின்றன. அந்த மாணவர்கள் 2020 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி 3 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும், 4 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும் தெரிவு செய்யப்டுகின்றனர்.
தொடரும் 4 ஆண்டுகளில் மாத்திரம் 261 மாணவர்கள் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி அவர்களில் 238 பேர் சித்தியடைகிறார்கள். அவர்களில் 153 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்று உயர்கல்வியைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது தோற்றிய மொத்த மாணவர் தொகையில் 59% ஆகும்.

இத்தகைய இமாலய வெற்றிகளை பாடசாலைக்கு ஈட்டித் தருவதற்கு தேவையான திட்டங்கள், வழிகாட்டல்கள் எல்லாமே எமது அதிபருடைய தூரநோக்கின் பிரதிபலன்கள் என்றால் அது மிகையில்லை. ஒவ்வொரு மாணவன் பற்றியும் தனித்தனியாக அறிந்து அந்த மாணவனின் அடைவு பற்றி தனித்தனியாக ஆராய்வது அவரது தனித் திறமையாகும். அதே போன்று உயர் தர விஞ்ஞானப் பிரிவு வகுப்புக்களில் ஒவ்வொரு நாளும் என்னென்ன பாடங்கள் கற்பிக்கப்பட இருக்கிறது என்பதைக் கூட அறிந்து வைத்து தேவையான கண்காணிப்புகளை மேற்கொள்பவராக இருக்கிறார்.

வாண்மைத்துவ வாழ்வில் மட்டுமன்றி தனது தனிப்பட்ட வாழ்விலும் அவர் ஒரு வெற்றியாளராக மிளிர்கிறார். ஒரு மகனாக, உடன்பிறப்பாக, கணவனாக, தகப்பனாக அவர் சிறந்த முன்மாதிரியாக நடந்துகொண்டுள்ளார். ஜாபிர் – ரிஸானா தம்பதியினர் பெற்றெடுத்த முத்தான மூன்று பிள்ளைகளில் இருவர் மருத்துவ பீடத்திலும், ஒருவர் பொறியியல் பீடத்திலும் கல்வி கற்று வருகிறார்கள். நலிவுற்றிருந்த தனது பொருளாதாரத்தையும் சீர் செய்து கொண்ட அவர் இன்று பிறர் துன்பங்களின் உதவும் ஒரு பரோபகாரியாக உள்ளார். பாடசாலையின் ஆசிரியர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பவராகவும், தேவையான ஆலோசனைகளை  வழங்கக் கூடியவராக இருக்கிறார். தனது பொருளாதாரத்திலிருந்தும் கணிசமாக பாடசாலைக்கும் கல்விப்புலத்துக்கும் வாரி வழங்கும் ஒரு வள்ளலாகவும் அறியப்படுகிறார்.

அறிவுப் பயணத்தின் ஒவ்வொரு படியிலும் அர்ப்பணிப்புடன் பயணித்த அவர், இன்று தனது ஓய்வை எட்டியுள்ளார். 38 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய கனவுடன் தொடங்கிய அவரின் பயணம், ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை வெளிச்சமிட்டுக் கொடுத்த ஒரு ஒளிப்பிளம்பாக வளர்ந்து பரிணமிக்கிறது.

வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ சவால்களையும் சோதனைகளையும் சந்தித்தபோதும் அதிபர் ஜாபிர் அவர்கள் என்றுமே ஒழுக்கத்திலும் நேர்மையிலும் சிறந்து விளங்கினார். அர்ப்பணிப்புடன் செயலாற்றி பாடசாலையின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த அவர் தனது பாசறையில் வளர்ந்த அனைவரினது கண்களிலும் கல்வியின் கனவை விதைத்தார்.

இன்று பாடசாலையில் அவர் விட்டுச்செல்லும் அடிச்சுவடுகள் காலத்தால் அழிக்க முடியாத பலநூறு மாணவர்கள் வாழ்வில் அறிவெனும் விளக்கேற்றியதன் தடயமாக நிலைக்கும். அரச சேவையின் நிறைவில் ஓய்வுநிலை எய்தினாலும், கல்விக்கான அவரது முன்னெடுப்புகள் ஓயப்போவதில்லை!

இந்த ஓய்வு அவரது அரச சேவையின் பதவிக்கே. அவரது சேவை இத்துடன் முடியப் போவதில்லை என்பதை நாம் அறிவோம். அவரது சேவை எமது பாடசாலைக்கும், ஊருக்கும், சமூகத்துக்கும் கிடைக்க வேண்டும்.

அதிபர் ஜாபிர் அவர்கள் சிறந்த தேக ஆரோக்கியத்துடன், நீண்ட காலம் வாழ எங்கள் அனைவரினதும் பிரார்த்தனைகளில் அவரை இணைத்துக் கொள்கிறோம்.
அவர் ஆற்றிய பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொண்டு அதற்கான நற்கூலியை அவருக்கும், அவரைப் பெற்றெடுத்த பெற்றோருக்கும் வழங்குமாறு அல்லாஹ்விடம் இருகரம் ஏந்துகிறோம்!

ஆக்கம்: பயாஸ் முஹம்மத்,_
_பிரதி அதிபர்,_
_அல்-அஷ்ரக் ம.வி.,_
_தல்கஸ்பிடிய_

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button