கல்வியின் இதயத் துடிப்பாய் வாழ்ந்த அஷ்ஷெய்க் ஏ.எம். றஹ்மத்துல்லாஹ்

-கல்வியின் இதயத் துடிப்பாய் வாழ்ந்த அஷ்ஷெய்க் ஏ.எம். றஹ்மத்துல்லாஹ்-
சில மனிதர்கள் ஒரு பதவியை அலங்கரிப்பார்கள் ஆனால் ஒரு சிலரே அப்பதவிக்கு அர்த்தம் கொடுப்பார்கள். அப்படிப்பட்ட அரிய கல்விச் சேவையாளர்களில் ஒருவர்தான் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம். றஹ்மத்துல்லாஹ் அவர்கள்.
2026 மே 24ஆம் திகதியுடன் அவர் அரச சேவையிலிருந்து ஓய்வுநிலை அடையவுள்ளார். ஆனால் உண்மையில் ஓய்வுபெறுவது அவரது உத்தியோகப் பதவியே தவிர அவர் விதைத்த கல்விச் சிந்தனைகளும் மனிதநேயப் பண்புகளும் ஒருபோதும் ஓய்வுபெறப்போவதில்லை.
ஏனெனில் அவர் ஒரு சாதாரண கல்வி நிர்வாகி அல்ல. கல்வியை ஒரு பணி என்று எண்ணாமல் ஒரு இபாதத் என்று கருதியவர்.
மாணவர்களை ஒரு எண்ணிக்கையாக எண்ணாமல் நாளைய சமூகத்தின் பொறுப்பாளர்களாகக் கண்டவர்.
அதனால் தான் அவரது மூன்று தசாப்தங்களுக்கு மேலான கல்விச் சேவை ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்விலும், நூற்றுக்கணக்கான ஆசிரியர்களின் சிந்தனைகளிலும் அழியாத தடமாக பதிந்துள்ளது.
1993 ஜனவரி 11ஆம் திகதி அக்கரைப்பற்று அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராக தனது கல்விப் பணியை ஆரம்பித்தார். இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம், அறபு மொழி போன்ற பாடங்களை கற்பித்த அவர் வெறும் பாடப்புத்தக அறிவை மட்டும் வழங்கவில்லை மாறாக மாணவர்களின் உள்ளங்களில் ஒழுக்கம், பணிவு, மரியாதை, மார்க்கப்பற்று போன்ற உயரிய பண்புகளையும் விதைத்தார்.
அவரது வகுப்பறை என்பது பாடம் நடத்தப்படும் இடமாக மட்டுமல்லாமல் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுத்தரும் ஒரு பயிற்சிக் கூடமாக இருந்தது. அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும், அவர் நடந்துகொண்ட ஒவ்வொரு முறையும் மாணவர்களுக்கு வாழ்வியல் பாடமாக மாறியது.
2009 முதல் 2013 வரை அக்கரைப்பற்று அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயத்தின் அதிபராகப் பொறுப்பேற்ற போது ஒரு பாடசாலையை மட்டுமல்ல, ஒழுக்கமும் திறமையும் இணைந்த கல்விக் குடும்பமொன்றை உருவாக்கினார்.
அவரது தலைமையின் கீழ் அடிநிலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது, மாணவர்களின் அடிப்படைத் திறன்கள் மேம்படுத்தப்பட்டன, ஒழுக்கமும் கல்வித் தரமும் இணைந்து வளர்க்கப்பட்டதுடன் ஆசிரியர் – மாணவர் – பெற்றோர் உறவு மேலும் வலுப்படுத்தப்பட்டது.
அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் ஜூனியர் கல்லூரி, பைத்துல்மால்,பைத்துல் ஸகாத், பைத்துல் ஹிக்மா ஆகியவற்றின் உருவாக்கத்திற்கும் அவர் அமைத்த அடித்தளம் இன்று பலராலும் நன்றியுடன் நினைவுகூரப்படுகிறது. ஒரு அதிபராக அவர் கட்டடங்களை மட்டும் உருவாக்கவில்லை கனவுகளையும் உருவாக்கினார்.
2013ஆம் ஆண்டு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட அவர் பின்னர் பதில் வலயக் கல்விப் பணிப்பாளர், அம்பாறை வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எனப் பல பொறுப்புகளை வகித்தார்.
இறுதியாக 2021 முதல் 2026 மே 24 வரை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகச் சேவையாற்றினார்.
அவர் சென்ற இடமெல்லாம் ஒழுங்கு உருவானது….
திட்டமிடல் வலுவடைந்தது….
நம்பிக்கை பிறந்தது….
செயல்திறன் உயர்ந்தது….
கல்வி அபிவிருத்தி, நிர்வாக வலுப்படுத்தல், ஆசிரியர் ஆளுமை மேம்பாடு போன்ற பல துறைகளில் அவர் அமைத்த அடித்தளம் இன்று பலராலும் பாராட்டப்படுகிறது.
அவரது இதயத்தில் எப்போதும் ஒலித்த ஒரு சொற்றொடர் “மாணவர்களே எஜமானர்கள்”இது வெறும் கோஷமல்ல. அவரது முழு நிர்வாகத்தின் உயிர்நாடி. மாணவர்களின் நலன், அவர்களின் கல்வி அடைவு, அவர்களின் எதிர்காலம் இவை அனைத்தும் அவரது ஒவ்வொரு தீர்மானத்திலும் பிரதிபலித்தன அதன் விளைவாக அக்கரைப்பற்று கல்வி வலயம் தேசிய மட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பதிவு செய்தது.
2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 3C 3S அடிப்படையில் 84% சித்தி வீதத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் 6ஆம் இடத்தையும் மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தையும் பெற்றது.
2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் 89% சித்தி வீதத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தையும் மாகாண மட்டத்தில் 1ஆம் இடத்தையும் அடைந்தது.
2023 உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மருத்துவத் துறைக்கு 23 மாணவர்களும், பொறியியல் துறைக்கு 16 மாணவர்களும் உட்பட மொத்தமாக 480 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டனர். இந்தப் பெறுபேறுகள் வெறும் புள்ளிவிபரங்கள் அல்ல. ஒரு மனிதரின் தொலைநோக்கு பார்வை, பொறுப்பு உணர்வு, மாணவர்களுக்கான அக்கறை, மற்றும் துஆவுடன் கூடிய அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உயிரோட்டமான சாட்சிகள்.
கல்வியுடன் சமூகப் பணியையும் இணைத்த அவர் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஸகாத் நிதியத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றினார். ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதும் கல்விச் சேவையின் ஓர் அங்கமே என்பதை தனது வாழ்வால் உணர்த்தினார்.
ஒரு அரச அதிகாரி ஓய்வுபெறலாம் ஆனால் அவர் உருவாக்கிய மாணவர்கள் ஓய்வுபெறமாட்டார்கள்.
அவர் வளர்த்த ஆசிரியர்கள் ஓய்வுபெறமாட்டார்கள். அவர் விதைத்த ஒழுக்கமும் மனிதநேயமும் ஓய்வுபெறமாட்டாது. இன்று அக்கரைப்பற்று கல்வி வலயம் உயரமாக நிற்பதற்கு பின்னால், அமைதியாக உழைத்த ஒரு மனிதரின் வியர்வை இருக்கிறது. அவரது பொறுப்புணர்வு இருக்கிறது. அவரது துஆ இருக்கிறது. அவரது தன்னலமற்ற அர்ப்பணிப்பு இருக்கிறது.
அஷ்ஷெய்க் ஏ.எம். றஹ்மத்துல்லாஹ் அவர்கள் போன்ற கல்விச் சேவையாளர்கள் உண்மையில் அரிது. அவரது ஓய்வு என்பது ஒரு நிர்வாகியின் ஓய்வு மட்டுமல்ல ஒரு பொற்காலத்தின் நிறைவு.
அல்லாஹ் அவர்களின் கல்விச் சேவைகளையும் சமூகப் பணிகளையும் ஏற்றுக்கொண்டு, ஆரோக்கியமான நீண்ட ஆயுளையும், மனநிம்மதியையும், ஈருலக வெற்றிகளையும் அருள்வானாக.
என்.முகம்மட் நஜாத்
ஆசிரியர்
அறபா வித்தியாலயம்
அட்டாளைச்சேனை



