“பணக்கார நாட்டை உருவாக்க, 20 வருடங்களுக்கு எம்மிடம் ஆட்சியை தாருங்கள்” – மாலிமா நாடாளுமன்ற உறுப்பினர்
“ஒரு பணக்கார நாட்டையும், அழகான வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்க வேண்டுமானால், பொதுமக்கள் 20 வருட காலத்திற்கு எங்களுடன் இருக்க வேண்டும்” என்று தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கம் தற்போது 60 வருடங்களுக்கும் மேலாக ஒரே ஆளும் கட்சியினால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், கியூபா அரசாங்கம் 70 வருடங்களாகவும், வியட்நாம் அரசாங்கம் 55 வருடங்கள் பழமையானதொரு அரசாங்கமாகவும் காணப்படுவதை நினைவு கூர்ந்த அவர், தமது அரசாங்கத்திற்கும் அத்தகையதொரு நீண்டகால ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில், மக்களுக்கு ஒரு பணக்கார நாட்டையும், அழகான வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, 2029 ஆம் ஆண்டிலும் தப்பியோட முடியாத (உறுதியான) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களே என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார தெரிவித்துள்ளார்.
அந்த வெற்றியை யாராலும் தடுக்க முடியாது எனவும், அவரைப் போன்ற நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரு தலைவர் பல தசாப்தங்களாக உருவாகவில்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



