உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்ததன் பலன் மக்களுக்கு…
உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்கும் வகையில், பாகிஸ்தான் அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒரு லீட்டருக்கு 22 பாகிஸ்தான் ரூபாய்களால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த புதிய விலை திருத்தம் மே மாதம் 30ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விலை குறைப்புடன், பாகிஸ்தானில் ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 22 பாகிஸ்தான் ரூபாய்களால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை சுமார் 381 பாகிஸ்தான் ரூபாய்களாக (சுமார் 411.48 இலங்கை ரூபாய்) அமைந்துள்ளது.
ஒரு லீட்டர் டீசலின் விலையும் 22 பாகிஸ்தான் ரூபாய்களால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை சுமார் 380 பாகிஸ்தான் ரூபாய்களாக (சுமார் 410.40 இலங்கை ரூபாய்) அமைந்துள்ளது.
மண்ணெண்ணெய் விலை 313.44 பாகிஸ்தான் ரூபாயிலிருந்து 272 பாகிஸ்தான் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது (சுமார் 293.76 இலங்கை ரூபாய்).
பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் முதன்மையான பணி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “உலக சந்தையின் விலைக் குறைப்பின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதாக அளித்த வாக்கை பிரதமர் நிறைவேற்றியுள்ளார்” என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சுமார் 6-7 பாகிஸ்தான் ரூபாய்களால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
பாகிஸ்தான் அரசாங்கம் தற்போது வாராந்தம் எரிபொருள் விலையை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
