“ஊழலைத் தடுப்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது.. இப்படிச் சென்றால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.. – பேராயர்”
ஊழலைத் தடுப்பதற்கான முறையான பொறிமுறையொன்றை வகுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளதாகவும், தற்போதைய கொடுக்கல் வாங்கல்களில் வெளிப்படைத்தன்மை கடுமையாகக் குறைந்துள்ளதாகவும் கொழும்பு பேராயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு பேராயர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனாதான சாலையை (தத்தீவகை) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த கர்தினால் ஆண்டகை, நாட்டில் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாகவும், ஊழலைத் தடுப்பதற்கான முறையான வழிமுறைகள் இல்லாததால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) என்பது மக்களின் தரப்பில் இருந்து முடிவுகளை எடுக்கும் ஒரு நிறுவனம் அல்ல என்றும், அது லாபத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு வங்கி என்றும் கர்தினால் ஆண்டகை கூறினார். அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முயன்றால், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
உலக அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எண்ணெய் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்றும், அரசாங்கம் எப்படியாவது முயற்சி செய்து மக்களின் இந்த வாழ்க்கைச் சுமையைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாட்டை ஆளும் தலைவர்கள் இதைவிட புரட்சிகரமான மற்றும் நவீன வழிகளில் சிந்திக்க பழகிக்கொள்ள வேண்டும் என்று கர்தினால் ஆண்டகை வலியுறுத்தினார்.
தற்போதுள்ள பாரம்பரிய வழிமுறைகளை மாற்றியமைக்காவிட்டால், இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



