“வர்த்தகப் பற்றாக்குறையும் பெருமளவில் அதிகரிப்பு.. நடப்புக் கணக்கு ஆபத்தான நிலையில்.. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பிணைமுறிக்களை விற்கின்றனர்..”
2026 ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்த நான்கு மாத காலப்பகுதியில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 3,693 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் காணப்பட்ட 2,257 மில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் பெருமளவிலான அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
ஜனவரி – ஏப்ரல் காலப்பகுதியில் ஏற்றுமதி வருமானம் 4,535 மில்லியன் டாலர்கள் வரை 5.1% என்ற சிறிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், அதே காலப்பகுதியில் இறக்குமதிச் செலவினம் 25.2% என்ற மாபெரும் சதவீதத்தால் அதிகரித்து, 8,228 மில்லியன் டாலர்களாகப் பதிவாகியுள்ளது.
ஏற்றுமதி விலைகளை விட இறக்குமதி விலைகள் அதிகரித்ததன் காரணமாக, 2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டின் வர்த்தக வீதம் (Terms of Trade) 6.4% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவிக்கிறது. இதன் காரணமாகப் பணவனுப்பல்கள் (Remittances) அதிகரித்த போதிலும், நடப்புக் கணக்கு (Current Account) மீது கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டியை (CCPI) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம், 2026 மே மாதத்தில் 5.5% ஆகப் பதிவாகி, மத்திய வங்கியின் இலக்கு மட்டத்தை விட இன்னும் சற்று உயர்வாகவே காணப்படுகிறது. குறிப்பாக, உணவு சாரா பணவீக்கம் 7.8% போன்ற உயர் மட்டத்தில் காணப்படுவது, எதிர்காலத்தில் வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிப்பதற்கான அபாயத்தைக் காட்டுகிறது.
பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை மத்திய வங்கி 2026 மே 26 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒரே இரவுக் கொள்கை வட்டி விகிதத்தை (Overnight Policy Rate) 100 அடிப்படைப் புள்ளிகளால் 8.75% வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வர்த்தக வங்கிகளின் பிரதான கடன் வழங்கும் வட்டி வீதங்களும் மற்றும் அழைப்புப் பண வீதங்களும் (Call Money Rates) அதிகரித்துள்ளதுடன், இது எதிர்காலத்தில் வர்த்தகத் துறையினர் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும்.
கட்டுமானத் துறையின் கொள்வனவு முகாமையாளர் சுட்டி (PMI), ஏப்ரல் மாதத்தில் மாதாந்த அடிப்படையில் சுருக்கமடைந்துள்ளது. அதேபோன்று, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் சுட்டிகளும் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் கணிசமாகக் குறைந்துள்ளன, இது பொருளாதார நடவடிக்கைகள் மந்தமடையும் அபாயத்தைக் காட்டுகிறது.
அறிக்கையிடப்பட்ட வாரத்தில், அரசாங்கப் பிணைமுறி மற்றும் திறைசேரி உண்டியல்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசம் காணப்பட்ட ரூபாயின் பெறுமதி சுமார் 5.49% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் இவ்வாறு வெளியேறுவது வெளிநாட்டு நாணய சந்தையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.3% இனாலும், சுற்றுலாத்துறை மூலமான வருமானம் 1,111 மில்லியன் டாலர்கள் வரை 19.4% இனாலும் வீழ்ச்சியடைந்துள்ளமையானது, வெளிநாட்டு நாணயத்தை ஈட்டித் தரும் பிரதான வழியொன்றை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது.
2026 மே 29 ஆம் திகதியாகும் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5.4% தேய்மானத்தைப் (மதிப்பிறக்கத்தைப்) பதிவு செய்துள்ளது.



