News

குறைந்த விலைக்கு மேலும் எரிபொருள் வழங்கினால் நாடு மேலும் நெருக்கடிக்குள்ளாகும்.. – மத்திய வங்கி ஆளுநர்”

மத்திய கிழக்கின் யுத்த சூழலுக்கு மத்தியில் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்மட்டத்தில் காணப்படுவதனால், உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தி நிவாரணங்களை வழங்க முயற்சித்தால், நாட்டின் பொருளாதாரம் மேலும் கடுமையான நெருக்கடிக்குள்ளாகலாம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

தெரண தொலைக்காட்சியுடனான நேர்காணலொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஆளுநர், தற்போதைய சூழ்நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளவாறு, இதற்கு முன்னர் 1.6% ஆகக் காணப்பட்ட பணவீக்கம் தற்போது 5.5% என்ற மட்டத்திற்கு உயர்ந்துள்ளது. ஆரம்பக் கட்டத்தில் இந்த யுத்தம் குறுகிய காலத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது நீடித்துச் செல்வதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்மட்டத்திலேயே நீடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“தற்போது 5% மட்டத்தில் காணப்படும் பணவீக்கம், வரும் நாட்களில் 7% வரை உயர்வதற்கான அபாயம் காணப்படுகின்றது” என்றும் அவர் மேலும் வெளிப்படுத்தினார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்த போதிலும், இந்நாட்டின் நுகர்வில் எவ்வித வீழ்ச்சியும் தென்படவில்லை என ஆளுநர் இங்கு வலியுறுத்தினார். கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாட்டின் இறக்குமதிச் செலவு தொடர்ச்சியாக 2 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், இவ்வாறு அதிக செலவீனங்களை எதிர்கொண்டு எரிபொருளை இறக்குமதி செய்து, அதனை குறைந்த விலைக்கு வழங்குவதை பொருளாதாரத்தினால் தாங்கிக்கொள்ள முடியாது என்பது அவரது கருத்தாகும்.

இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம்கூட (CPC) தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் விலை திருத்தங்களுக்கான கோரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் சில மாதங்களில் பணவீக்கம் மேலும் உயர்வதைத் தடுப்பதற்காக, மத்திய வங்கி ஏற்கனவே பணவழங்கல் கொள்கையை (Monetary Policy) இறுக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். நாட்டின் உள்நாட்டுத் தேவையைக் கட்டுப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். “நாங்கள் உள்நாட்டுத் தேவையைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம். அவ்வாறு செய்யாவிட்டால், வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்க வேண்டியேற்படும்” என வீரசிங்க தெரிவித்தார்.

ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட நீண்ட காலத்திற்கு எரிபொருள் விலை உயர்மட்டத்தில் நீடிப்பதனாலும், விநியோக வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகளினாலும் நாட்டின் பொருளாதார நிர்வாகத்தின் முன்னால் புதிய சவால்கள் உருவெடுத்துள்ளதாக இந்த நேர்காணலில் மேலும் தெரியவந்துள்ளது.

Recent Articles

Back to top button