இங்கிலாந்தில் பராமரிப்பு வேலைக்கு (care workers) சென்றவவர்களை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் சட்டப்பூர்வமாக வசித்து வந்தாலும் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது – எராளமான இலங்கையர்களும் உள்ளடக்கம்

பராமரிப்பு ஊழியர்களுக்கான (care workers) குடும்ப விசாக்கள் மீது அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், பிரித்தானியாவில் (UK) சட்டப்பூர்வமாக வசித்து வரும் இலங்கை குடும்பங்களும் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரித்தானிய உள்நாட்டுத் துறை அமைச்சகத்திடமிருந்து (Home Office) கடிதங்களைப் பெற்றுள்ளனர்.
தி கார்டியன் (The Guardian) செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, சமீபத்திய வாரங்களில் ஐந்து வயதுடைய சிறுவர்கள் உட்பட குறைந்தது ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பராமரிப்பு ஊழியர் விசாக்கள் மீதான புதிய கட்டுப்பாடுகள் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே இந்த குடும்பங்கள் அங்கு வந்திருந்த போதிலும், தற்போது அவர்கள் பிரிந்து செல்லுமாறு அல்லது சொந்த நாட்டிற்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
“நாங்கள் 2022 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கு வந்ததில் இருந்து பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக வசித்து வருகிறோம். எனது விசா 2031 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் எனது சார்ந்திருப்பவர்களாக (dependants) இருக்கும் எனது கணவர் மற்றும் குழந்தைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது,” என்று ஸ்காட்லாந்தின் பெர்த் நகரில் வசிக்கும் இலங்கை பராமரிப்பு ஊழியரான வருணி ஆரச்சிகே தெரிவித்துள்ளார். அவரது எட்டு மற்றும் ஐந்து வயதுடைய இரு குழந்தைகளும் அங்குள்ள பாடசாலையில் நன்றாகப் படித்து வருகின்றனர்.
அக்டோபர் 2022 இல் அங்கு வந்த மற்றொரு இலங்கை பராமரிப்பு ஊழியரான ரசிக சமரசிங்க தனது மனவேதனையை இவ்வாறு வெளிப்படுத்தினார்: “நாங்கள் இந்த நாட்டில் அனைத்தையும் சட்டப்பூர்வமாகச் செய்துள்ளோம், ஒவ்வொரு வரியையும் செலுத்தியுள்ளோம். நான் விசாக் காலம் முடிந்து தங்கியிருப்பவர் அல்ல; எனது குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்தையே நான் விரும்புகிறேன். எனது கவனம் குடும்பத்தின் மீதே உள்ளது. எனது குடும்பம் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது.”
2023 ஆம் ஆண்டளவில் 100,000 பராமரிப்பு ஊழியர் விண்ணப்பதாரர்களுடன் 120,000 குடும்ப உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளதாக அரசாங்கம் மதிப்பிட்டதைத் தொடர்ந்து இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 2024 முதல், பராமரிப்பு ஊழியர்கள் தங்களைச் சார்ந்திருப்பவர்களை அழைத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், ஜூலை 2025 இல் வெளிநாட்டு ஆட்சேர்ப்பும் தடை செய்யப்பட்டது.
சார்ந்திருப்பவர்களுக்கான விசாக்கள் நிராகரிக்கப்படும் சம்பவங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக சட்டத்தரணிகள் கூறுகின்றனர். புலம்பெயர்ந்த பராமரிப்பு ஊழியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள், குடியுரிமை தகுதிக்கான கால எல்லையை 5 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளாக நீட்டிப்பது பெருமளவிலான ஊழியர்கள் வெளியேறுவதற்கு வழிவகுக்கும் என்றும், இதனால் வாராந்திர பராமரிப்பு நேரங்கள் மில்லியன் கணக்கில் இழக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கின்றன.
இந்தக் கொள்கையை நியாயப்படுத்திப் பேசிய உள்நாட்டுத் துறை அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர், “பிரித்தானியாவில் குடியேறுவது என்பது ஒரு பாக்கியமே தவிர உரிமை அல்ல, அது சம்பாதிக்கப்பட வேண்டும்; விதிகளுக்கு உட்பட்டு நடப்பவர்களுக்கும் பங்களிப்பு செய்பவர்களுக்கும் இது வெகுமதியாக வழங்கப்படுகிறது,” என்று கூறினார்.



