NPP அரசு இல்லாவிட்டால் ஒரு லீட்டர் எரிபொருள் 750 ரூபாயாக உயர்ந்திருக்கும்.. பாதிப்பைக் குறைப்பதற்காகவே நாங்கள் விலையை அதிகரித்தோம்…
இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் ஜனக ராஜகருணா அவர்கள் விடுத்த ஊடக அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
தற்போதைய அரசாங்கம் தலையிட்டு விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளாதிருந்தால், நாட்டு மக்கள் ஒரு லீட்டர் டீசலை 750 ரூபாய் போன்ற மிக உயர்ந்த விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
தனியார் எண்ணெய் நிறுவனங்கள் நட்டமடையும் சந்தர்ப்பங்களில் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதாகவும், கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட எரிபொருள் வரிசைகளுக்கு அதுவும் ஒரு காரணம் என்றும் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“கூட்டுத்தாபனத்தின் சந்தைப் பங்கு இதற்கு முன்னர் 53%-54% போன்ற மட்டத்திலேயே இருந்தது. ஆனால் தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் குறைத்ததால், தற்போது அந்த அளவு 75%-80% வரை அதிகரித்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் நிறுவனங்கள் நட்டமடைவதில்லை எனவும், அவர்கள் அந்தப் சுமையை அரசாங்கத்தின் மீது சுமத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கங்கள் தனியார் நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை வி விமர்சித்த தலைவர், இதன் மூலம் போட்டித்தன்மை ஏற்பட்டு விலை குறையும் என்று கூறப்பட்ட போதிலும், அது முற்றிலும் பொய் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளதாகக் கூறினார்.
பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையிலேயே தற்போதைய அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தியதாகவும், மக்களுக்கு சுமார் 100 ரூபாய் வரி சலுகையை வழங்கி விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த விலை உயர்வை நாம் எவ்வாறு தாங்கிக்கொள்வது மற்றும் மக்களுக்கு எவ்வாறு நிவாரணம் வழங்குவது என்பதுதான் இதில் உள்ள மிக முக்கியமான விடயம். ஊழலை ஒழிப்பதன் மூலம் சேமிக்கப்பட்ட பெருந்தொகையான பணம் அரசாங்கத்திடம் உள்ளதுடன், அந்தப் பணம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க பயன்படுத்தப்படுகிறது” என்றும் திரு. ஜனக ராஜகருணா மேலும் தெரிவித்தார்.
தேவைப்பட்டால், மக்களுக்காக மீண்டும் மானியங்களை வழங்கி விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தயங்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.



