ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளை சலே வழிநடத்தியுள்ளார் !
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் சதித்திட்ட அடிப்படையில் தொடர்புபட்டிருந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, அதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகளை வழிநடத்தியுள்ளமை விசாரணைகளில் தெளிவாக தெரியவந்துள்ளதாகக் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (10) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், குறிப்பிட்டார்.
மேலும், இந்தத் தாக்குதலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர், சுரேஷ் சலே என்பவரால் நீர்கொழும்பு பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களுக்கு முஸ்லிம் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டு, அங்குள்ள மக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
புலனாய்வுத் தகவல் வழங்குநர் ஒருவர் இந்தத் தாக்குதல் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குத் தெளிவுபடுத்தியிருந்த போதிலும், அதற்கெதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அசாத் மௌலானா என்பவரும் பிரித்தானியாவின் ‘சேனல் 4’ (Channel 4) ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், இந்தத் தாக்குதலுடன் சுரேஷ் சலேவுக்குத் தொடர்பிருப்பதாகத் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், “சத்தியாக்கிரகப் போராட்டங்கள் அல்லது உண்ணாவிரதங்கள் நடத்தப்படுவதைக் காரணம் காட்டி, இந்த விசாரணை நடவடிக்கைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது” என்றும் அவர் உறுதியளித்தார்.
அமைச்சுசார் அறிவிப்பின் கீழ் கருத்துக்களை முன்வைக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


