News

பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் இலங்கையிலிருந்து சுமார் 190 பில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜெப்ரி முகம்மதுக்கு விளக்கமறியல்

பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் இலங்கையிலிருந்து சுமார் 190 பில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை ஜூலை 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான ஜெப்ரி முகம்மது, கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.


வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதாக பொய்யாகக் கூறி, ஜெப்ரி முகம்மது சுமார் 190 பில்லியன் ரூபாவை வெளிநாடுகளுக்கு மாற்றியுள்ளதாக சிரேஷ்ட அரச சட்டவாதி ஒஸ்வால்ட் பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


அரச தரப்பு வழக்கின்படி, கொழும்பு கோட்டையை தளமாகக் கொண்ட ஏ.ஒய். இன்வெஸ்ட்மென்ட் (A.Y. Investment) என்ற நிறுவனத்தைப் பயன்படுத்தி தந்தி பரிமாற்றங்கள் (telegraphic transfers) மூலம் இந்த பணம் அமெரிக்க டாலர்களில் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக ஜெப்ரி முகமது தனது சொந்த பெயரிலும், நிறுவனத்தின் பெயரிலும் தெரிவு செய்யப்பட்ட வங்கிகளில் பல வங்கிக் கணக்குகளைத் திறந்திருந்ததாக புலனாய்வாளர்கள் மேலும் குற்றம் சுமத்தியுள்ளனர்.


இதேபோன்ற நிதிப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய மேலும் குறைந்தது 36 நிறுவனங்களை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button