ஹரக்கட்டா 5000 இலட்சம் ரூபா இலஞ்ச பேரத்தில், 1200 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டதற்காக கைதான ரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க ஆகியோர் சிக்கிய வலைப்பின்னல் அம்பலம்! ; வழக்கின் பின்னணி என்ன? விளக்கம் இதுதான்

எம்.எப்.எம். பஸீர்
பாதாள உலக சந்தேக நபரான ஹரக்கட்டா எனும் நதுன் சிந்தக கொலை செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்க 5000 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரி, அதில் முற்பணமாக 1200 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளரான சரித் அபேசிங்க, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சத்துரங்க ஆகியோர் வியாழக்கிழமை (25) கைது செய்யப்பட்டனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் நேற்று காலை சிறப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த சம்பவங்களை மையப்படுத்தியே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் நேற்று மாலை கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
நேற்று இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவினர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்தபோது, ஆணைக்குழு சார்பில் உதவிப் பணிப்பாளர் இஷானி ராஜபக்ஷவுடன் பிரதி பணிப்பாளர் அனுஷா சம்பந்தபெரும ஆஜராகி விடயங்களை முன்வைத்தனர்.
முதல் சந்தேக நபரான சரித் அபேசிங்க சார்பில் முன்னிலையான கமல், இரண்டாம் சந்தேக நபரான ரகித ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான நெவில் அபேரத்ன, நளிந்த இந்திரதிஸ்ஸ ஆகியோரோடு ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆஜரானார். மூன்றாம் சந்தேக நபருக்காக சட்டத்தரணி கீத் கருணாரத்ன முன்னிலையானார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் சட்டத்தரணி அனுஷா சம்பந்தபெரும, விசாரணை தொடர்பான விடயங்களை நீதிமன்றத்துக்கு பின்வருமாறு முன்வைத்தார்:
“கனம் நீதிவான் அவர்களே…. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அனாமதேய முறைப்பாடு ஒன்றை மையப்படுத்தி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படியே இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
சி.ஐ.டி தடுப்புக்காவலில் இருந்த ஹரக்கட்டா எனும் பெயரால் அறியப்படும் நதுன் சிந்தக கொலை செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்கவும், சி.ஐ.டி தடுப்புக்காவலில் இருந்து அவரை மாற்றி பூஸா சிறைச்சாலையை தவிர்த்து வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றவும் சந்தேக நபர்கள் இலஞ்சம் பெற்றுள்ளனர்.
ஹரக்கட்டாவின் மனைவி மது எனும் மதுஷானியிடம் 5000 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளது. பின்னர் அது 2000 இலட்சம் ரூபா வரை பேரம் பேசப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது. இந்த இலஞ்ச விவகாரத்தில் சாட்சியாளர்களாக நதுன் சிந்தக, மிதிகம ருவன், ஹேர்பி எனும் நிர்மல கமகே உள்ளிட்டோரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. ஹேர்பி எனும் நிர்மல கமகே சத்தியக்கடதாசி ஒன்றினையும் அளித்துள்ளார். மிதிகம ருவன் சத்தியக்கடதாசி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.”
நதுன் சிந்தக்கவின் சகாவான ஹேர்பி எனும் நிர்மல கமகேவை தொடர்புகொண்டுள்ள முதல் சந்தேக நபரான சரித் அபேசிங்கவே இந்த இலஞ்ச விவகாரம் தொடர்பிலான பேரம் பேசலை முன்னெடுத்துள்ளார். பின்னர் ஹேர்பி அந்த விடயத்தை டுபாயில் வசிக்கும் ஹரக்கட்டாவின் மனைவிக்கு குறிப்பிட்டுள்ளார். ஹேர்பிக்கும் டுபாயில் வீடு உள்ள நிலையில் அவர் அங்கு தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தடுப்புக்காவலில் இருந்த ஹரக்கட்டாவை காப்பாற்ற ஹேர்பி, ஹரக்கட்டாவின் மனைவியோடு கலந்துரையாடி முதல் சந்தேகநபருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார். அதன் பின்னர் முதல் மூன்று சந்தேக நபர்களும் 2023ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி ஒரே விமானத்தில் டுபாய்க்கு சென்றுள்ளனர். இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு சான்றுகள் அனைத்தும் பெறப்பட்டுள்ளன.
இந்த இலஞ்சத் தொகையானது டுபாயில் உள்ள ஹேர்பியின் வீட்டில் கைமாற்றப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் சரித் அபேசிங்க, ரகித ராஜபக்ஷ மற்றும் அருண ஆகிய மூன்று பேரும் கலந்துகொண்டுள்ள நிலையில், மற்றைய தரப்பில் ருவன் சாமர எனப்படும் மிதிகம ருவன், ஹரக்கட்டாவின் மது எனும் மதுஷானி மற்றும் அவரது பிள்ளை, ஹேர்பி ஆகியோரும் இருந்துள்ளனர். இதன்போதே ஹரக்கட்டாவின் உயிருக்கு 5000 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளது. அவ்வளவு பணம் செலுத்த தன்னிடம் இயலுமை இல்லை என மதுஷானி தெரிவித்துள்ள நிலையில், முதலில் இலஞ்சத் தொகை 3000 இலட்சம் ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. பின்னர் அது 2000 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 1200 இலட்சம் ரூபா முற்பணமாக சந்தேக நபர்களால் கோரப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு இடம்பெற்ற தினத்துக்கு மறுதினம் மதுஷானி, ஹேர்பியின் வீட்டில் வைத்து 1000 இலட்சம் ரூபாவை கொடுத்துள்ளார். இதன்போது மிதிகம ருவனும் உடன் இருந்துள்ளார். ஹேர்பியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். பின்னர் சந்தேக நபர்கள் முற்பணத்தின் மிகுதி தொகையான 200 இலட்சத்தையும் கோரியுள்ளனர். அந்த பணத்தொகை பின்னர் டுபாயில் உள்ள ரகித ராஜபக்ஷவின் உறவினர் ஒருவரிடம் மிதிகம ருவன், ஹேர்பியின் ஊடாக கையளித்துள்ளார். இந்த பணம் அனைத்தும் திராம் பண அலகிலேயே கையளிக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த பணத்தொகை கையளிக்கப்பட்ட போதும் ஹரக்கட்டா, சி.ஐ.டி.யில் இருந்து மாற்றப்படாமல் தடுப்புக்காவல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹரக்கட்டாவின் மனைவி, ஹேர்பியிடம் கையளிக்கப்பட்ட பணத்தொகையை மீளக்கோரியுள்ளார். இது தொடர்பில் ஹேர்பி, சந்தேக நபர்களை தொடர்புக்கொண்ட போது, முழுமையான திட்டப்படி 2000 இலட்சம் ரூபா கையளிக்கப்பட வேண்டும் எனவும், அதில் 1200 இலட்சம் ரூபாவே கையளிக்கப்பட்ட நிலையில் அந்த தொகைக்கு ஏற்றவாறு ஹரக்கட்டா உயிர் சேதமின்றி காப்பாற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சி.ஐ.டியில் இருந்து மாற்றப்பட வேண்டுமாயின் மிகுதித் தொகையும் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ச்சியாக கேள்வியெழுப்பப்பட்ட நிலையில், முதல் சந்தேக நபரான சரித் அபேசிங்க 1000 இலட்சம் ரூபாவை திரும்ப தர முடியாது என குறிப்பிட்டுள்ளதுடன், அந்த பணம் இரண்டாம் சந்தேக நபரிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் 200 இலட்சம் ரூபாவை மீளளிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அந்த 200 இலட்சம் ரூபா மிதிகம லசந்த எனும் லசந்த விக்கிரமசேகர (அண்மையில் வெலிகம பிரதேச சபைக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டவர்) ஊடாக ஹரக்கட்டாவின் மனைவிக்கு கையளிக்கம்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பாக மது எனும் மதுஷானி இலங்கைக்கு வந்து வாக்குமூலமளிக்க விருப்பம் தெரிவிக்காத போதும், இந்தோனேசியாவில் தற்போது இருக்கும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார். அவர் பொலிஸ்மா அதிபருக்கும் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். விசாரணையாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளில் இந்த மூன்று சந்தேக நபர்களும் 2023.03.25 ஆம் திகதியன்று டுபாய்க்கு சென்று 2023.03.29 ஆம் திகதியன்று நாடு திரும்பியுள்ளனர்.
உண்மையில் இந்த சம்பவம் தொடர்பில் முதலில் ‘சைபர் நியூஸ்’ எனும் இணையத்தளம் ஊடாக அனுஜ ரஞ்சித் ராஜபக்ஷ என்பவர் விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். அவரை ஆபாச இறுவெட்டுக்கள், ஆபாச பிரசுரங்களை வைத்திருந்ததாகக் கூறி கைது செய்து வழக்குத் தொடுத்துள்ளனர். அப்போதைய நீதியமைச்சர் இரண்டாம் சந்தேக நபருடைய தந்தை ஆவார். அவர் சட்டமா அதிபர் ஊடாக பொலிஸ்மா அதிபருக்கு தகவலளித்து இந்த போலியான கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை 2023 செப்டெம்பரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே, சந்தேக நபர்களுக்கு பிணையளிக்க ஆட்சேபனை முன்வைக்கிறேன் எனத் தெரிவித்த பிரதிப் பணிப்பாளர், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆவது அத்தியாயத்துக்கமைய பணிப்பாளர் நாயகத்தின் சான்றிதழை நீதிமன்றில் முன்வைத்தார்.
இதனையடுத்து இரண்டாம் சந்தேக நபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா பிணை கோரினார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த சான்றிதழ் சட்டத்தின் முன் வலுவற்றது என வாதிட்ட அவர், அந்த சான்றிதழை ஏற்றுக்கொண்டால் கூட விசேட காரணிகளின் அடிப்படையில் பிணை வழங்கலாம் என சுட்டிக்காட்டினார். இதன்படி தனது சேவை பெறுநருக்கு ‘சிலீப் அப்னியா’ (Sleep Apnea) எனும் நோய் நிலைமை காணப்படுவதாகவும், அதனை விசேட காரணியாக ஏற்குமாறும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் தனது சேவை பெறுநர் ஒரு சட்டத்தரணி என்ற நிலையில், அவர் ஏற்கனவே பொறுப்பேற்ற பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்குகளில் அவர் ஆஜராக வேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டு பிணையளிக்குமாறும் கோரினார்.
முதலாம் சந்தேக நபர் சார்பில் பிணை கோரிய சட்டத்தரணி, முதலாம் சந்தேக நபருக்கு இருதய கோளாறு இருப்பதாகவும், அது தொடர்பில் மூன்று ‘ஸ்டென்ட்கள்’ (Stents) செலுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் ஐந்து ஸ்டென்ட்கள் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டு, அதனை விசேட காரணியாக ஏற்குமாறு குறிப்பிட்டார்.
மூன்றாம் சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது சேவைபெறுநருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் எந்தக் குற்றச்சாட்டையும் நேரடியாக முன்வைக்கவில்லை எனவும், முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேக நபர்களுக்கு மாத்திரமே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தனது சேவைபெறுநர் புரிந்த குற்றத்தை தெளிவாக முன்வைக்காத நிலையில் அதனை விசேட காரணியாகக் கருதி பிணையளிக்குமாறு கோரினார்.
இதனையடுத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அனுஷா சம்பந்தபெரும, மீண்டும் விடயங்களை முன்வைத்தார்:
“ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் முன்வைக்கப்பட்ட சான்றிதழ் சட்டரீதியானது. எனவே சந்தேக நபர்களுக்கு பிணையளிக்க வேண்டுமாயின் விசேட காரணிகள் ஆராயப்பட வேண்டும். முதல் சந்தேக நபர் மற்றும் இரண்டாம் சந்தேக நபரின் நோய் நிலைமையை விசேட காரணியாக கருத முடியாது. இரண்டாம் சந்தேக நபரின் தந்தை முன்னாள் நீதி அமைச்சரும், இந்த சம்பவத்தோடு தொடர்புப்பட்டு டுபாய் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு எதிராகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் சந்தேக நபரே இந்த இலஞ்சப் பணத்தை உண்டியல் முறைமை ஊடாக நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். இதுவே அவர் மீதான குற்றச்சாட்டு. எனவே சந்தேக நபர்களுக்கு பிணையளிக்க வேண்டாம்.”
அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் அசங்க எஸ். போதரகம, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149ஆவது அத்தியாயத்தின் பிரகாரமான சான்றிதழ் சட்ட ரீதியானது என நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி சந்தேக நபர்களுக்கு பிணையளிப்பதாயின் விசேட காரணிகள் அவசியம் எனவும், எனினும் நீதிமன்றின் முன் அவ்வாறான போதிய விடயங்கள் முன்வைக்கப்படாததால் சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

