உலகிலேயே மிகவும் வறண்ட பகுதியாக கருதப்படும் பாலைவன நிலம், அரிதாகப் பெய்த மழையைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட மலர் இனங்கள் பூத்து குலுங்கும் வண்ணமயமான 🥀🌺 நிலப்பரப்பாக மாறிய அதியச நிகழ்வு

உலகிலேயே மிகவும் வறண்ட பகுதியாக கருதப்படும் சிலியின் அட்டகாமா பாலைவனம், அரிதாகப் பெய்த மழையைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட மலர் இனங்கள் பூத்து குலுங்கும் வண்ணமயமான நிலப்பரப்பாக மாறியுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் சூழலை ஆய்வு செய்யும் அளவுக்கு வறட்சியைக் கொண்ட இந்தப் பகுதி, சாதகமான மழை மற்றும் காலநிலை சூழல் உருவாகும்போது திடீரென உயிர்ப்பெடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் மண்ணுக்குள் காத்திருக்கும் விதைகள், மழை கிடைத்தவுடன் விரைவாக முளைத்து பாலைவனத்தை மலர்களால் நிரப்புகின்றன.
அனானுகாஸ், சுஸ்பிரோஸ், படாஸ் டி குவானகோ, கர்ராஸ் டி லியோ உள்ளிட்ட அந்தப் பிராந்தியத்திற்கே உரிய மலர்கள் இளஞ்சிவப்பு, ஊதா, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் பரவி கண்கவர் காட்சியை உருவாக்குகின்றன.
இதனுடன் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகள் மற்றும் பறவைகளும் வருகை தருவதால், வறண்ட நிலம் தற்காலிகமாக உயிர்ச்செழிப்பான சூழலாக மாறிகாணப்படுகின்றது.
வல்லுநர்களின் கருத்துப்படி, 15 முதல் 30 மில்லிமீட்டர் வரையிலான மழை மற்றும் பொருத்தமான வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவை இந்த நிகழ்விற்கு அவசியமானவை. கடந்த நான்கு தசாப்தங்களில் சுமார் 15 முறை மட்டுமே இந்த அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது.
இந்த இயற்கை அதிசயத்தைப் பாதுகாக்கும் நோக்கில், 2023ஆம் ஆண்டு சிலி அரசு அட்டகாமாவின் சுமார் 570 சதுர கிலோமீட்டர் பரப்பை உள்ளடக்கிய தேசிய பூங்காவை உருவாக்கியுள்ளது.
இயற்கை சூழல் மாறும் போது உயிர் எப்படி மீண்டும் மலர்கிறது என்பதற்கான அரிய எடுத்துக்காட்டாக அட்டகாமா பாலைவனம் பார்க்கப்படுகிறது.



