அமெரிக்கவில் பெட்ரோல் விலை அதிகம்… உடனடியாக குறைக்கவும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (30) அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது ஒரு கொள்கலன் மசகு எண்ணெய் 68 டொலராக உள்ள நிலையில், பெட்ரோல் விலை குறைக்கப்படாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது,
”பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் உடனடியாக தங்கள் விலையைக் குறைக்க வேண்டும். இந்த அறிக்கைக்கு உடனடியாக எதிர்வினையாற்றும் வகையில் சரியான முடிவை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
கிரேட் அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையை, சில்லறை விற்பனை நிலையங்கள் குறைக்க வேண்டும். சில்லறை விற்பனையாளர்கள் இதனைச் செய்யாவிட்டால், பெரும் பிரச்னையை சந்திக்க நேரிடும்.
ஒரு கேலனுக்கு (3.7 லிட்டர்) 2.50 டொலரை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள். கலிஃபோர்னியாவில் பெட்ரோலுக்காக அதிக வரி வசூலிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
விரைவில் பொருள்களின் விலையை விட வரி அதிகமாகிவிடும். இதனை அமெரிக்கா விரும்பவில்லை. அபத்தமான வரிகளாலும் சொந்த அரசாங்கத்தாலும் துன்புறுத்தப்படும் கலிஃபோர்னியா மக்களும் இதனை விரும்பமாட்டார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.


