நீர்கொழும்பு சிறைக் கலவரத்தைத் தூண்டியதாகக் கூறப்படும் ‘கட்டுவெல்லகம சுரேஷ்’ பூஸா சிறைக்கு இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தைத் தூண்டியதாகக் கூறப்படும் ‘கட்டுவெல்லகம சுரேஷ்’ என்ற சந்தேகநபர் பூஸா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்ர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் குறித்த நபர் மீது, கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல், கொள்ளை, போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு நாரம்மல பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவருக்கு எதிரான வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றங்களில் விசாரணையிலுள்ளன.
நீர்கொழும்பு சிறையில் கடந்த 05 மற்றும் 06ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 7 சிறை அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலையிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.



