News

இவ்வளவு காலமும் துண்டு விழுந்து வந்த பட்ஜெட்டில் 19,730 கோடி ரூபாய்கள் மிகை ஏற்பட்டு,  திறைசேரியில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் மொத்த கையிருப்புடன் சத்தமில்லாமல் படைக்கப்பட்டுள்ள சாதனை பற்றி ஒரு தெளிவான விளக்கம்

தகவல் : Hisham’s insight
இலங்கை சத்தமில்லாமல் சாதனை ஒன்றை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அது என்ன சாதனை? நமது சமையலறையில் இன்னும் அதை நாம் உணரவில்லை, ஆனால் மகத்தான ஒரு சாதனை அது. 1955 ஆம் ஆண்டுக்கு பிறகு செலவை வரவு மீறிய ஆண்டாக பதிவாகி இருக்கிறது.

கடந்த 70 வருடங்களாக நாம் போட்ட பட்ஜெட்டுகள் எல்லாமே வரவை புறந்தள்ளி கொண்டு செலவு மிகைத்தவைதான். 1955 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த தினசரி பத்திரிகைகளை எடுத்து பார்த்தால் தெரியும், வரவு செலவு திட்டத்தின் துண்டுவிழும் தொகையை ஈடு செய்ய அப்படி செய்ய இருக்கிறோம் இப்படி செய்ய இருக்கிறோம் என்று அரசியல்வாதிகள் அடித்து விடுவார்கள். அந்த சரித்திரம் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு மே மாத இறுதி வரையான காலப்பகுதிகளில் வரவு செலவு திட்ட மிகுதி மட்டும் 197 பில்லியன் ரூபாய்கள், அதாவது 19,730 கோடி ரூபாய்கள். பட்ஜெட் சர்ப்ளஸ்! வரவு செலவு திட்ட மிகை, மொத்த செலவுகளை விட அதன் மொத்த வருமானம் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு நிலைமை.

Video > https://youtu.be/-pyW3BcdE_A?si=7iEgxkYaAr4N6sUe


இதேவேளை அரசினுடைய கஜானாவில் இருக்கும் மொத்த கையிருப்பு எவ்வளவு தெரியுமா? 1.13 டிரில்லியன் ரூபாய்கள். பில்லியன்ல சொல்லட்டுமா, அதாவது 1130 பில்லியன் ரூபாய்கள். கோடியிலும் சொல்லலாம், நமக்கு புரியும்படி கோடிகளில் சொன்னால் ஒரு லட்சத்து 13ஆயிரம் கோடி ரூபாய்கள். நாம் நாடுகளின் வெற்றி கதைகளை வாசிக்கும் போது, அந்த நாடுகளினுடைய வெற்றிகளுக்கு பின்னால் இருந்து புள்ளி வைத்து கோலம் போட்ட இயக்குனர்களினுடைய சரித்திரத்தை வாசிக்கும் போது இப்படியான வரவு மிகுதி கதைகளை கேட்டிருப்போம். நமக்கு தெரிந்த நவீன உதாரணம் சிங்கப்பூர். சிங்கப்பூர் என்ன செய்யும் என்றால், இப்படியான வரவு மிகுதியை அப்படியே தன்னுடைய மக்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொடுக்கும்.

உதாரணமாக ஆண்டு வருமானம் 25000 டாலருக்கு மேல் இருந்தால் 300, 25000க்கும் ஒரு லட்சம் டாலருக்கும் இடையில் சம்பாதித்திருந்தால் 500. அதாவது இந்த வரவு மிகுதியை ஒரு போனஸாக கருதி, உழைக்கும் மக்களின் அளப்பெரிய பங்குக்கு சன்மானமாக வழங்கி சிங்கப்பூர் மகிழ்வூட்டும்.


இலங்கையும் அதே போன்ற ஒன்றைதான் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்களின் வங்கி கணக்குகளில் நேரடி வைப்பு செய்யாத ஒரு வேலை. அப்படி என்ன செய்கிறது இலங்கை?

முன்னரெல்லாம் உங்களுக்கு தெரியும் பெரும் வட்டி வீதத்தில் சர்வதேச வங்கிகளிடம், சர்வதேச நாடுகளிடம் கடன் வாங்கித்தான் அபிவிருத்தி திட்டங்களையே முன்னெடுத்துச் செல்லும். திவாலாக காரணமான இப்படிப்பட்ட அபிவிருத்தி திட்ட வேலைகளை யார் கடனும் இன்றி இலங்கை மக்களினுடைய பணத்தில் ஆரம்பித்திருக்கிறது அரசு. 

கட்டுநாயக்க விமான நிலையத்தினுடைய டெர்மினல் 2 கட்டுமானம் இதில் முக்கியமான ஒன்று. மற்றது குருநாகல் தம்புள்ள வரை நீளக்கூடிய அதிவேக நெடுஞ்சாலை நவம்பரில் ஆரம்பமாகிறது. ரம்புக்கன கலகிதர வரையான அதிவேக நெடுஞ்சாலை, ககத்துடுவ இங்கிரிய என்று அதிவேக நெடுஞ்சாலைகள் எல்லாம் ஒரு சதம் வெளிநாட்டு கடனின்றி ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. 

இதேபோல கடந்த வருடம் தித்வா புயல் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு 617 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கி இருந்தது அரசு. முன்னர் இப்படி ஒரு அனர்த்தம் வந்தால் வெளிநாடுகளின் தயவன்றி மீழ்வதை பற்றி சிந்திக்கவே அச்சமாக இருந்தது, ஆனால் இப்போது சேமிப்புகளும் வரவு மிகுதிகளும் மக்கள் நலனுக்கு பயன்பட்டு கொண்டிருக்கின்றன.


இந்த வலுவான பொருளாதார நிலைமைக்கு அரச வருமானம் 28.3% அதிகரித்ததும், சிலவினங்கள் 7.4% கட்டுப்படுத்தப்பட்டதுமே ஆதார காரணங்களாக சொல்லப்படுகின்றன. இலக்கங்களை எல்லாம் தூக்கி பரணில் போட்டுவிட்டு இதற்கான காரணத்தை புரியக்கூடிய மொழியில் சொன்னால், அதுதான் பொருளாதார ஒழுக்கம். பொருளாதார ஒழுக்கம் இல்லாமல் ஒரு அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் இதெல்லாம் எந்த விதத்திலும் சாத்தியமாக இருக்காது. நாம் இத்தனை நேரம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த புள்ளி விபரங்கள் தரவுகளை எல்லாம் பார்த்ததும் சிலர் வழக்கம் போல தமது திருவாயால் நம்மை அரசு செலவை இயந்திரம் என்று சொல்லுவார்கள். 

ஆனால் இது ஒன்றும் பலவத்தையில் தந்த தரவுகளோ அல்லது கில்வின் சில்வாவின் கற்பனையில் அடித்து விட்டவையோ அல்ல, அத்தனையும் மத்திய வங்கி வெளியிட்டவை. சுயாதீன பொருளாதார ஆர்வலர்கள் தமது சமூக ஊடக பக்கங்களில் எழுதியவை. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவிடம் காட்டினால் அவரும் ஏற்றுக்கொள்வார்.


உலக நாடுகளை குறைந்த ஆதாயம் பெறும் நாடுகள், குறைந்த மத்தியதர வருமானம் உடைய நாடுகள், உயர் மத்தியதர வருமானம் உடைய நாடுகள், உயர் வருமானம் உடைய நாடுகள் என்று சொல்லி நான்கு தூண்களில் நிறுத்துவார்கள். இலங்கை 59 உலக நாடுகளுடன் இரண்டாம் கட்டத்தில் இருப்பதாக உலக வங்கி சொல்லுகிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு திவாலாகி திருவோடு ஏந்தியதோடு மட்டுமல்லாமல், பெங்களூர் யாசகரிடம் நன்கொடை வாங்கி, ஜனாதிபதியையும் துரத்தி அடித்த இலங்கையினுடைய நிலைமை இன்று வேறு விதமாக இருக்கிறது. 

இலங்கை இன்று உயர் மத்தியதர வருமான நாடு. அப்படி என்றால் கந்தல் துணியாக சிதைந்து போன தேசம் ரோல்ஸ்ரோய்ஸ் காரின் பளபளப்புடன் மிளிர தொடங்கிவிட்டதா என்று கேட்டால், அதெல்லாம் இன்னும் சாத்தியமில்லை. அதற்கு ஒரு நீண்ட ஒரு பயணத்தை செல்ல வேண்டி இருக்கிறது. அதேவேளை ஒரு தேநீர் கடையை கூட செய்திராத, ஆங்கிலம் பேச தெரியாத, சர்வதேச தொடர்புகள் இல்லாத, வாழ்நாள் முழுக்க புழுதியும் போராட்டமுமாக வாழ்ந்த ஒரு கும்பல் இப்படி நாடாளும் என்று பரிகசிக்கப்பட்டதற்கான பதில்கள் கொஞ்சம் கணதியாக இருக்கின்றன.
சுற்றுலா, அந்நிய முதலீடுகள், ஏற்றுமதி எல்லாமே எகிறி இருக்கின்றன.  

இலங்கையினுடைய தேங்காய் உற்பத்தி ஏற்றுமதி மிக கணிசமாக அதிகரித்து சென்று கொண்டிருக்கிறது. தேயிலை ஏற்றுமதி தான் இலங்கை ஏற்றுமதி வருமானத்தில் நம்பர் ஒன் நாட்காலியில் இத்தனை காலமும் உட்கார்ந்திருந்தது. ஆனால் அந்த நாட்காலியில் தேங்காய் வந்து உட்காரும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.  

ஜனவரி முதல் மே வரையான காலத்தில் 514 மில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டி தந்திருக்கிறது தேங்காய் ஏற்றுமதி. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 21 சதவீத கிடுகிடு வளர்ச்சி அது. உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், இந்த அரசு வந்த ஆரம்ப காலங்களில் நாடு முழுக்க தேங்காய் தட்டுப்பாடு இருந்தது, தேங்காய் ஒன்றினுடைய விலை 300 ரூபாயை நெருங்கிக் கொண்டிருந்தது. சத்தமில்லாமல் தேங்காய் பிரையன் லாராவினுடைய சாதனையை முறியடித்து விடும் போல இருந்தது. தேங்காய் இப்படி பாடாய் படுத்திக் கொண்டிருந்த போது அரிசி தட்டுப்பாடும் வந்து சேர்ந்தது. மாலை நேர ஹிரு மற்றும் திரண செய்தி அறிக்கையை பார்க்கும்போது நள்ளிரவில் ஆட்சி கவிழும் போல ஒரு நிலைமை இருந்தது. இன்று அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்டிருப்பதாக அறிவித்திருக்கிறது அரசு.
இதே மாதிரி வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் இந்த வருடத்தின் முதல் அரையாண்டு பகுதியில் அனுப்பி இருக்கும் பணம் 4.6 பில்லியன் டாலர்கள். 

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 23.2% வளர்ச்சி. இதே வேளை கஸ்டம்ஸ் எனப்படும் இலங்கை சுங்க திணைக்களமும், எக்சைஸ் எனப்படும் இலங்கை மதுவரி திணைக்களமும், இன்கம் டாக்ஸ் எனப்படும் இறைவரி திணைக்களமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக வரிவருவாயை அள்ளி தந்து கொண்டிருக்கின்றன. இலங்கையின் வரிவருமானத்தின் மும்மூர்த்திகள் தான் இந்த மூன்று நிறுவனங்கள். இன்று வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய இலக்குகளை எல்லாம் சர்வசாதாரணமாக கடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் கஸ்டம்ஸ் தன்னுடைய முன்னைய வரிவருவாய் சாதனைகளை முறியடிப்பதை பொழுது போக்காக வைத்திருக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. 

கடந்த வருடத்தினுடைய முதல் அரை ஆண்டுடன் ஒப்பிடும்போது கஸ்டம்ஸ் இந்த வருடம் முதல் அரை ஆண்டில் மேலதிகமாக 313 பில்லியன் ரூபாய்களை ஈட்டி இருக்கிறது. எல்லாமாக மொத்தம் 1373 பில்லியன் ரூபாய்கள். இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று இருக்கிறது இப்போது நிலவரம்.


ராணுவ ஒழுக்கம் போன்று அமைந்துவிட்ட இந்த பொருளாதார பொறிமுறைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக 5%க்கும் மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியுடன் ஒரு சீரான பயணத்தில் இருக்கிறது இலங்கை. நாம் ஏழு எட்டு சதவீதத்துக்கும் அப்பால் செல்ல வேண்டும் என்று தன்னுடைய அகல கனவுகளை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. இதெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரே பாட்டில் குபேரனாகும் ஹீரோவினுடைய கதை அல்ல, இதற்கு இலங்கை மக்கள் கொடுத்த விலையும் வலியும் ரொம்பவே அதிகம். நான்கு வருடங்களுக்கு முன்பு அத்தியாவசியங்களுக்காக மக்கள் வரிசையில் இருந்து உயிரை விட்ட நாடுதான் இது. கோட்டாபய போக ரணில் வந்தார், ரணில் சமாளித்தார். ஐஎம்எப் சொன்னது சொல்லாதது எல்லாவற்றையும் நிறைவேற்ற தொடங்கினார்.

“இந்த வாரம் கஷ்டம் அடுத்த வாரம் இதைவிட கஷ்டம்” என்று சொல்லிச் சொல்லியே நாட்களை நகர்த்தினார் ரணில். ஆனால் அவரோ அவருடைய அமைச்சர் அவையோ மக்களுக்கு வழிகாட்டியாக தமது செலவுகளை குறைத்துக் கொள்ளவில்லை. 

இன்னொரு விதத்தில் சொன்னால் ராஜபக்சக்களுக்கு பூரண பாதுகாப்பாக அமைந்தது ரணிலின் ஆட்சி, அவர்களுக்கு எதிராக ஒரு கீரல் கூட விழவில்லை.
இங்கே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டி இருக்கிறது, ரணிலை போல லாபமீட்டும் அரச நிறுவனங்களை எல்லாம் விற்கும் கொள்கைகளில் இன்றைய ஆட்சியாளர்கள் இல்லை. ரணிலை போல இறக்குமதிகளை எல்லாம் தடை செய்யவில்லை. அத்தனைக்கும் ஆசைப்படு போல அத்தனை வாயில்களையும் திறந்து விட்டிருக்கிறார்கள்.

இதேவேளை செலவு குறைப்பையும் சிக்கனத்தையும் அரசு சிறப்பாக பேணி வருகிறது. முன்னாள் ஜனாதிபதிகளினுடைய சலுகைகள் வரப்பிரசாதங்கள் எல்லாம் அதிரடியாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியம் நிறுத்தப்பட்டிருக்கின்றது. ஊழல்கள் எதுவுமே இதுவரை இல்லை, ஊழல் ஒழிப்பு தொடர்பான சர்வதேச மதிப்பீடுகளிலும் 14 இடங்கள் தடாலடியாக முன்னேறி இருக்கிறது தேசம். இதையெல்லாம் கவனித்த ஐஎம்எப், மிக குறுகிய காலத்தில் தன்னுடைய பொருளாதார காயங்களை சுத்தப்படுத்திக் கொண்ட ஒரே நாடு இலங்கை என்று பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டிருக்கிறது.


உண்மையில் அனுரகுமார திசாநாயக்க பதவிக்கு வந்தது முதலே எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே பல்லவியை வெவ்வேறு ராகத்துடன் பாட தொடங்கி இருந்தார்கள். ஆறு மாதம் தாங்க மாட்டார்கள் என்றார்கள். அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆடை ஏற்றுமதிக்கு வரிவிதிக்க போகிறார், அத்தோடு படுத்து விடுவார்கள், நாம் அவர்களை இழுப்பாமலேயே ஆட்சி செய்யலாம் என்றார்கள். சர்வதேச நாணய நிதியம் என்ன பேசுகிறது என்றே இவர்களுக்கு புரியாது, நமக்குத்தான் ஆங்கிலம் தெரியும் என்றார்கள். ஆனால் கடந்த வருடம் மட்டும் 1.1 பில்லியன் டாலர்கள் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்கு வந்திருக்கின்றன. 

நிமால் சிறிபால டி சில்வாவின் லஞ்ச விவகாரத்தால் இலங்கையுடன் முரண்பட்டிருந்த ஜப்பான் இப்போது ஆபத்துக்கு உதவும் அயலவன் போல ஆகிவிட்டது. ஜப்பானின் ஜெய்கா (JICA) நிறுவனம் கட்டுநாயக்க विमान நிலைய விரிவுபடுத்தலில் முக்கிய பங்காற்றி இருக்கிறது. 2030 ஆம் ஆண்டில் 36 பில்லியன் டாலர்கள் அந்நிய முதலீடு என்ற திட்டத்தை நோக்கி நகர்கிறது இலங்கை.
மின்சார கட்டணத்தை எதிர்காலத்தில் குறைக்கும் அதிரடி திட்டமான, பகலில் கிடைக்கக்கூடிய சூரிய ஒளியை பிரமாண்ட பேட்டரிகளில் சேமித்து அவற்றை தேசிய மின்கட்டமைப்புக்கு இணைக்கும் பொறிமுறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 57 மில்லியன் டாலர்களை வழங்கி உதவுகிறது. ஒரு பக்கம் அமெரிக்காவையும், மறுபக்கம் சீனாவையும், இப்போதும் தலைக்கு மேலே கத்தி போல இருக்கும் இந்தியாவையும் அழகாக சமாளிக்கிறது இலங்கை.  

இப்படி ஒவ்வொன்றாக சமாளித்து தத்தி தவழ்ந்தபடி முன்னேறிக்கொண்டு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சமரசமற்ற விசாரணைகளும் கைதுகளும் என்று ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.
கடந்த வருட நவம்பரில் தித்வா புயல் வந்தது, பல 100 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருக்கிறது, அரசு ஏப்ரலில் வீழ்ந்துவிடும் என்று ஆரம்பித்தன எதிர்கட்சிகள். அதுவும் முடியவில்லை, தித்வாவையும் சமாளித்து எழுந்து நிற்க பார்த்தால் உலக அசுரன் ட்ரம்ப் இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு எதற்கென்றே தெரியாத ஒரு யுத்தத்தை ஈரான் மீது தொடுத்தார். கடைசியில் ஹோமுஸ் நீரிணை மூடப்பட்டு எரிபொருள் விலையும் எகிறி, உலகமெங்கும் பணவீக்கம் அதிகரித்து பெரிய ஒரு பிரளயம் சூழ்ந்தபோது, கோட்டாபய ராஜபக்ச பாகம் 2 வரப்போகிறது, எரிபொருள் நெருக்கடி வரப்போகிறது, இனி நமது ராஜாங்கம் தான் என்றார்கள். மத்திய கிழக்கு அமலி துமளிகளால் எரிபொருள் விலைகளை எக்கச்சக்கமாக அதிகரிக்க வேண்டி ஏற்பட்டது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், கோட்டாபயவுக்கு நடந்ததுதான் நடக்கும் என்று அவசகுணமாக சதகால நேரமும் சொல்லப்பட்டதால், மேலும் பதட்டத்துக்குள்ளான அரசு கண்ட விலைக்கு எரிப்பொருட்களை வாங்கி குவித்தது. சந்தை விலையை விட அதிக விலையில் கருப்பு சந்தையில் வாங்கியதாக எதிர்கட்சிகள் அப்போது குற்றம் சுமத்த, அரசோ இப்படியோ மக்களுக்கு எந்த சிரமத்தையும் கொடுக்காமல் சமாளித்தோம் என்று கொலரை உயர்த்தி இருக்கிறது. எரிபொருள் விலைகள் கடந்த வாரம் குறைக்கப்பட்டாலும், பிப்ரவரி 28 ஆம் தேதி யுத்தம் தொடங்க முன்னரான காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இன்னமும் 40% அதிகம்.
புள்ளி விவரங்கள் என்னதான் நாடு பொருளாதாரத்தில் சரியான திசையில் செல்கிறது என்றாலும், தொடர்ச்சியான நெருக்கடிகளால் இன்னமும் மக்கள் முற்றாக மீளவில்லை.  

ஒரு வருடத்துக்கு இதே நிலைமை தொடர்ந்து மத்திய கிழக்கு பேட்டையும் அமைதியாக இருந்தால், கணிசமான வாழ்க்கை செலவு குறைப்பையும் நிவாரணத்தையும் மக்கள் எதிர்பார்க்க முடியும். எதிர்கட்சிகள் எல்லாம் உருப்படியான ஒரு பிரச்சாரத்தை அரசுக்கு எதிராக மேற்கொள்ள முடியாமல் இன்று விலவலத்து போயிருக்க காரணமே அவர்களுக்கு இன்னமும் இந்த அரசை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதுதான். அரசோ திரும்ப திரும்ப “வியட்னாம் – சீனா பாணியில் அமைந்த பொருளாதார மாடலை நாம் பின்பற்றுவோம்” என்கிறது. சீனா – வியட்னாம் பாணியில் பொருளாதாரத்தை மட்டும்தானா சீர் செய்ய போகிறார்கள் என்பதுதான் இங்கே இருக்கக்கூடிய மிக முக்கியமான கேள்வி. அவை ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் என்ற தகவலையும் சொல்ல வேண்டி இருக்கிறது, தேடி பாருங்கள்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button