News

தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு, சிறுபான்மை மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரலாற்றுச் சந்தர்ப்பம்

– சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் அபூபக்கர்
தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள் பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட முன்வந்திருப்பது, இலங்கையின் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள அரசியல், சமூக மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் என்று பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி முபிஸால் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒரே மேடையில் அமர்ந்து, பொதுவான கோரிக்கைகள் மற்றும் பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இணைந்து செயல்பட முன்வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். இது எந்தவொரு சமூகத்திற்கும் எதிரான அரசியல் முயற்சியாக அல்லாது, ஜனநாயக அடிப்படையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வுமிக்க அணுகுமுறையாகப் பார்க்கப்பட வேண்டும்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
“கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் பேச்சுவார்த்தைகளும் இணக்கப்பாட்டு முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவற்றில் பல இடைநடுவில் கைவிடப்பட்டதன் காரணமாக சிறுபான்மை மக்களிடையே நம்பிக்கையின்மை உருவாகியுள்ளது. இந்நிலையில், தற்போதைய இந்த ஒன்றிணைவு மற்றும் தொடர்ச்சியான சந்திப்புகள், தமிழ் பேசும் மக்களிடையே புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளன. இந்த அரசியல் உரையாடல் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்,” என வலியுறுத்தினார்.
அத்துடன், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான நிலையான தீர்வுகள் ஜனநாயக உரையாடல், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் அரசியல் ஒத்துழைப்பின் மூலமே சாத்தியமாகும் என்றும், எனவே இவ்வாறான கூட்டு அரசியல் முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆக்கபூர்வமான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
கடைசியாக, தமிழ் பேசும் மக்களின் அரசியல் ஒற்றுமை, அவர்களது ஜனநாயக உரிமைகள், சமத்துவம் மற்றும் நீதியை வென்றெடுப்பதற்கான முக்கிய அடித்தளமாக அமைய வேண்டும்; அது நாட்டின் தேசிய ஒற்றுமையையும் ஜனநாயகப் பண்பாட்டையும் வலுப்படுத்தும் ஒரு நேர்மறையான அரசியல் முன்னேற்றமாக அமையும் என்றும் கலாநிதி முபிஸால் அபூபக்கர் அபூபக்கர் குறிப்பிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button