News

போதைப்பொருள் விற்று 24,921,537 ரூபாவை ஈசி கேஷ் மூலமும் வங்கி கணக்கின் ஊடாக 4,911,100 ரூபாவை பணப்பரிவர்த்தனையும் செய்த 24 வயது இளைஞன் கைது

போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணத்தை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தமை (பணச்சலவை) தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவர், எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வளப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டு, திங்கட்கிழமை (13) அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


பொலிஸாரின் கூற்றுப்படி, 2025 டிசம்பர் 27 அன்று கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (“ஐஸ்”) போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதன் பின்னணியிலேயே இந்த விசாரணை ஆரம்பமாகியுள்ளது.  

அதனைத் தொடர்ந்த விசாரணைகளில், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை பரிமாற்றம் செய்ய ஹன்வெல்ல பகுதியில் உள்ள வங்கி கணக்கொன்று பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த வங்கி கணக்கின் ஊடாக 4,911,100 ரூபா பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி 13, ஏப்ரல் 5 மற்றும் மே 31 ஆகிய திகதிகளில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளின் போது, போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் 24,921,537 ரூபா பணம், ஈஸி கேஷ் (Easy Cash) மொபைல் பணச் சேவை ஊடாக இந்த அண்மைய சந்தேகநபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு பரிமாற்றப்பட்டுள்ளமை வெளிவந்துள்ளது.


சந்தேகநபர் வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகவும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button