கச்சா எண்ணெய் பேரல் 200 டாலருக்கு மேல் உயரும் அபாயம்.. நாட்டின் எரிபொருள் செலவு 62% அதிகரிப்பு..

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் கடுமையான இராணுவ பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி விலைகளில் பெரும் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஈரான், பாப் எல்-மண்டேப் (Bab-el-Mandeb) ஜலசந்தியை மூட நடவடிக்கை எடுத்தால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 200 அமெரிக்க டாலர்கள் வரை உயரக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லங்கா மெரின் சர்விசஸ் (Lanka Marine Services) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மதுர ஹெட்டியாராச்சி, உலக சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், அது உள்நாட்டு எரிபொருள் விலையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டதாகவும், கடந்த 14ஆம் திகதி 21 டாலர்களால் உயர்ந்த டீசல் பேரல் ஒன்றின் விலை, 15ஆம் திகதியாகும் போது மீண்டும் 7 டாலர்களால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவும் வேகமாக அதிகரித்துள்ளது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 62 சதவீத பாரிய உயர்வாகும்.
செங்கடல் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்கள் மற்றும் ஈரான் ஹோர்முஸ் (Hormuz) ஜலசந்தியை மூடக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டமையே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
ஈரான் தனது இராணுவ பலத்தைப் பயன்படுத்தி சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகளைத் தடுக்க முயன்றால், அது உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கும், இலங்கையைப் போன்ற நாடுகளின் பொருளாதாரத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலாக மாறும் என்று ஆய்வாளர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.



