ஆடம்பர விடுதியில் மீட்கப்பட்ட சவூதி இளவரசரின் உடலில் போதைப்பொருள்கள் கலந்திருந்தது கண்டறியப்பட்டதாக மரணத்திற்கு காரணமான மருத்துவ அறிக்கை வெளியானது

லண்டனில் உள்ள பிரபல ஆடம்பர விடுதியில் மீட்கப்பட்ட சவூதி இளவரசரின் உடலில் போதைப்பொருள்கள் கலந்திருந்தது கண்டறியப்பட்ட நிலையில், அவரது புகைப்படம் முதன்முறையாக வெளியாகியுள்ளது.
சவூதி அரேபியாவின் இளவரசரான அப்துல்லா பின் ஃபாஹத் பின் அப்துல்லா பின் அப்துல்அஜீஸ் பின் ஜலாவி அல் சவுத் (வயது 29) என்பவர், கடந்த நவம்பர் 25-ஆம் திகதி கென்சிங்டனில் உள்ள ‘மேரியாட்’ (Marriott) விடுதியில், ஒரு இரவுக்கு £600 கட்டணம் கொண்ட தனது அறையின் குளியலறையில் சடலமாகத் கண்டெடுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு, லண்டன் மேரியாட் விடுதியில் சவூதி இளவரசர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது உடலில் பலவகை போதைப்பொருள்களின் கலவை இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இளவரசர் நவம்பர் 19-ஆம் திகதி ஒரு வார காலத் தங்கலுக்காக இந்த விடுதிக்கு வந்திருந்ததாக ‘இன்னர் வெஸ்ட் லண்டன் மரண விசாரணை நீதிமன்றத்தில்’ (Inner West London Coroner’s Court) தெரிவிக்கப்பட்டது. விடுதியின் ஐந்தாவது மாடியில் அமைந்திருந்த அவரது அறைக்குச் சென்ற தூய்மைப் பணியாளர் ஒருவரே அவரது சடலத்தைக் கண்டு பிடித்துள்ளார்.
தகவலறிந்த அவசர மருத்துவ ஊர்திப் பணியாளர்கள் (Paramedics) விரைந்து வந்து தீவிர முயற்சி மேற்கொண்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து ‘தாரூடான்ட் பிரஸ்’ (Taroudant Press) செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த நபர் ஒருவர் தெரிவிக்கும்போது: “இளவரசர் அப்துல்லா அரச குடும்பத்திற்குள் அமைதியான மற்றும் அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு நபராகத் திகழ்ந்தார். மேலும், சமூக நலத்திட்டங்களுக்குப் பெருமளவில் இரகசியமாக நிதியுதவி வழங்கி வந்தவர்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “அல் சவுத் குடும்பம் உள்நாட்டு ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி, தங்களுக்குள் ஒரு மறுசீரமைப்பைக் மேற்கொண்டு வரும் இக்காலக்கட்டத்தில் இந்த இழப்பு நேரிட்டுள்ளது” என்றும் கூறினார்.
இளவரசர் அப்துல்லாவின் மறைவு குறித்து சவூதி அரச நீதிமன்றம் (Saudi Royal Court) டிசம்பர் 02-ஆம் திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிவிப்பில்: “இளவரசர் அப்துல்லா பின் ஃபாஹத் பின் அப்துல்லா பின் அப்துல்அஜீஸ் பின் முசாயித் பின் ஜலாவி அல் சவுத் அவர்கள், சவூதி அரேபியாவிற்கு வெளியே இறைவனடி சேர்ந்துவிட்டார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், முக்கியப் பிரமுகர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் ரியாத்தில் உள்ள ‘இமாம் துர்கி பின் அப்துல்லா’ மசூதியில் அவரது இறுதிப் பிரார்த்தனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அக்காலகட்ட சவூதி ஊடக அறிக்கைகளின்படி, குடும்பத்தின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில், அதிக எண்ணிக்கையிலான இளவரசர்களும் அதிகாரிகளும் இந்த இறுதிப் பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.
நச்சுயியல் பரிசோதனை அறிக்கையின் விவரங்கள்:
நச்சுயியல் பரிசோதனையின் (Toxicology test) முடிவில், இளவரசர் அப்துல்லாவின் இரத்தத்தில் 100 மில்லி லீட்டருக்கு 222 மில்லி கிராம் ஆல்கஹால் (Alcohol) இருந்தது கண்டறியப்பட்டது. இங்கிலாந்தின் சட்டப்பூர்வ மது அருந்தி வாகனம் ஓட்டுவதற்கான வரம்பான 80 மி.கிராம் என்பதை விட இது மூன்று மடங்கு அதிகமாகும். இந்த அளவு மட்டுமே ஒருவரை சுயநினைவிழக்கச் (Coma) செய்ய போதுமானது என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவரது உடலில் ஆபத்தான அளவில் ‘ஜி.எச்.பி’ (GHB – Gamma-hydroxybutyrate) என்ற போதைப்பொருளும், கஞ்சா (Cannabis) மற்றும் ‘ஸானாக்ஸ்’ (Xanax) உள்ளிட்ட பல மனக்கவலை எதிர்ப்பு மருந்துகளின் (Anti-anxiety medications) தடயங்களும் இருந்தது கண்டறியப்பட்டது.
இளவரசர் உயிரிழப்பதற்கு முன்பாகவே மது மற்றும் ‘ஸானாக்ஸ்’ மாத்திரைப் பழக்கத்திற்கு அடிமையாகிப் போராடி வந்துள்ளார். இதனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென்மேற்கு லண்டனில் உள்ள ‘ரோஹாம்ப்டன் பிரையரி கிளினிக்கில்’ (Priory Clinic in Roehampton) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் தங்கியிருந்த காலத்தில், மது, பென்சோடியாசெபைன்கள் (Benzodiazepines) மற்றும் ‘பிரிகேபலின்’ (Pregabalin) ஆகிய மருந்துகளின் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகளைப் பெற்றார்.
இது குறித்து மனநல ஆலோசகர் மருத்துவர் விக்டோரியா சாமோரோ கூறுகையில்: “சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது அவர் மனச்சோர்வு மற்றும் பதற்றத்திற்கான அறிகுறிகளுடன் காணப்பட்டார். ஆனால், சிகிச்சைக்குப் பின் விடுவிக்கப்பட்டபோது, அவர் தற்கொலை செய்து கொள்ளும் அபாயத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனது நண்பருடன் வெளியேறினார், அதன்பின்னர் திட்டமிடப்பட்ட இணையவழி (Zoom) ஆலோசனைகளில் பங்கேற்கவில்லை. இருப்பினும், அவர் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைத்து முழுமையாக முடித்ததால் அவர் மீது எந்தச் சந்தேகமும் எழவில்லை” என்று கூறினார்.
இளவரசருக்கு மேல் சுவாசக் குழாய் தொற்று நோய் இருந்ததாகவும், பின்னர் அதிலிருந்து குணமடைந்து அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் என்றும் மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு:
இளவரசர் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்துடன் செயல்பட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உதவி மரண விசாரணை அதிகாரி ஜீன் ஹார்க்கின் (Jean Harkin) தெரிவித்தார்.
விசாரணையை முடித்து வைத்துத் தீர்ப்பளித்த அதிகாரி ஜீன் ஹார்க்கின், “ஒன்றுக்கும் மேற்பட்ட போதைப்பொருள்களை ஒரே நேரத்தில் உட்கொண்டதால் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்து (Misadventure)” என மரணத்திற்கான மருத்துவக் காரணத்தைப் பதிவு செய்தார்.
மேலும், “இளவரசர் அப்துல்லாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் கூறினார்.



