News

ஹேவாஹெட்ட தொகுதி முஸ்லிம் மக்களின் ஜனநாயக உரிமையை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அரசியல் அநீதி!

2025 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர், கண்டி மாவட்டத்தின் பாதஹேவாஹெட்ட பிரதேச சபையில் சிறுபான்மை மக்களின், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பாக இடம்பெற்றுள்ள சம்பவங்கள் குறித்து எனது ஆழ்ந்த அதிருப்தியையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹேவாஹெட்ட தொகுதியின் பாதஹேவாஹெட்ட பிரதேச சபை எல்லைக்குள் அண்ணளவாக 9,000க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் சமூகமும் குறிப்பிடத்தக்க அளவில் இப்பிரதேசத்தில் வாழ்கின்றது. எனினும், இப்பிரதேசத்தின் பெரும்பான்மை சமூகமாக சிங்கள மக்கள் காணப்படுகின்றனர்.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாதஹேவாஹெட்ட பிரதேச சபைக்காக 49,088 செல்லுபடியான வாக்குகள் பதிவாகியதுடன், மொத்தம் 43 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

தேர்தல் முடிவுகளின்படி:

• தேசிய மக்கள் சக்தி (NPP) – 19,364 வாக்குகள் பெற்று 18 ஆசனங்கள்

• ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 14,090 வாக்குகள் பெற்று 12 ஆசனங்கள்

• பொதுஜன பெரமுன – 3 ஆசனங்கள்

• ஐக்கிய தேசியக் கட்சி – 3 ஆசனங்கள்

• சர்வஜன பலய – 2 ஆசனங்கள்

• ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு (UNA) – 1 ஆசனம்

• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 1 ஆசனம்

இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற 14,090 வாக்குகளில் கணிசமான பகுதி, முஸ்லிம் மக்கள் செறிந்தும் சிதறியும் வாழும் பகுதிகளிலிருந்தே கிடைத்துள்ளது என்பது தேர்தல் முடிவுகளின் மூலம் தெளிவாகிறது.

போப்பிட்டிய, குடா தெல்தொட்ட, பட்டியகம, கபடாகம, கரகஸ்கடை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு (SJB) பெரும் ஆதரவை வழங்கியிருந்தனர். அந்த மக்களின் நம்பிக்கையும் ஆதரவுமே அக்கட்சி பாதஹேவாஹெட்ட பிரதேச சபையில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால், அந்த நம்பிக்கைக்கும் அரசியல் ஆதரவுக்கும் உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்படாதது மிகவும் கவலைக்குரியதும், கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தி பல முஸ்லிம் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியிருந்த போதிலும், முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே 1,178 வாக்குகளுடன் வட்டார வெற்றியைப் பெற்று தற்போது பிரதேச சபை உறுப்பினராக உள்ளார்.

எனினும், வட்டார வெற்றிகளைப் பெற முடியாத நிலையில் இருந்த ஏனைய முஸ்லிம் வாக்காளர்களின் கணிசமான ஆதரவே ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த மேலதிக ஆறு போனஸ் ஆசனங்களுக்கும் முக்கிய அடித்தளமாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் மேலதிகப் பட்டியல் வேட்பாளர்களாக நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கட்சியின் வெற்றிக்காக முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலும் முன்னணியில் ஈடுபட்டனர்.

தேர்தல் காலங்களில், இவர்களில் சிலருக்கு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும் என்ற நம்பிக்கையும் உறுதிமொழிகளும் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், தேர்தல் வெற்றியின் பின்னர் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாதது முஸ்லிம் சமூகத்திடையே மிகப்பெரிய ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த ஆறு போனஸ் ஆசனங்களில் குறைந்தபட்சம் ஒரு ஆசனமாவது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தேர்தல் சட்ட விதிகளின்படி ஐந்து பெண்களை நியமிக்க வேண்டிய நிலை இருந்தபோதிலும், மீதமிருந்த ஒரு உறுப்பினர் பதவியை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதன் மூலம், அந்த சமூகத்தின் நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால், அந்த நியாயமான கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டது.

இதற்கு மேலாக, தற்போது தவிசாளர் பதவியிலிருந்து விலகிய உறுப்பினர் வெற்றி பெற்றிருந்த போப்பிட்டிய வட்டாரமும் முஸ்லிம் மக்கள் கணிசமாக வாழும் முக்கியமான பகுதியாகும். அந்த வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பட்டியல் வேட்பாளராக போட்டியிட்டு, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்பட்டிருந்தார்.

தவிசாளர் பதவி விலகியதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்தை, அதே பகுதியைச் சேர்ந்த அந்த முஸ்லிம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு வழங்குவதன் மூலம், முஸ்லிம் வாக்காளர்களின் நியாயமான எதிர்பார்ப்பை ஓரளவாவது நிறைவேற்றியிருக்க முடியும்.

மேலும், இந்த வெற்றிடத்தை முஸ்லிம் உறுப்பினர் ஒருவருக்கு வழங்குமாறு கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட மற்றும் பிரதேச அமைப்பாளர்கள், சமூக பிரதிநிதிகள் ஆகியோர் கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், அந்தக் கோரிக்கையையும் புறக்கணித்திருப்பது, முஸ்லிம் மக்களின் அரசியல் உணர்வுகளை மதிக்காத செயலாகவும், தேர்தலில் வழங்கிய ஆதரவுக்கு உரிய அங்கீகாரம் வழங்க மறுக்கும் அணுகுமுறையாகவும் நான் கருதுகின்றேன்.

சிறுபான்மை மக்களின் வாக்குகளை தேர்தல் காலங்களில் மட்டும் நாடி, தேர்தல் முடிந்த பின்னர் அவர்களின் அரசியல் உரிமைகள், பிரதிநிதித்துவ எதிர்பார்ப்புகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளை புறக்கணிப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் நடைமுறையாகும்.

மக்களின் வாக்குகள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல. அவை நம்பிக்கையின் வெளிப்பாடுகள். அந்த நம்பிக்கையை மதிக்கத் தவறும் எந்த அரசியல் கட்சியும் அதற்கான அரசியல் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தங்களது அதிருப்தியையும் கண்டனத்தையும் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் பொறுமையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, எதிர்வரும் முதலாவது தேர்தல் — அது மாகாண சபைத் தேர்தலாக இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும், பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தலாக இருந்தாலும் — தங்களது உரிமைகளையும் எதிர்பார்ப்புகளையும் புறக்கணித்தவர்களுக்கு ஜனநாயக ரீதியான பதிலை வழங்குவதற்காக பாதஹேவாஹெட்ட முஸ்லிம் வாக்காளர்கள் தமது ஜனநாயக சக்தியைப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறார்கள்.

கே. எம். யாஸீன்

முன்னாள் பாதஹேவாஹெட்ட பிரதேச சபை உறுப்பினர்

Recent Articles

Back to top button