News

மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண்ணுக்கு 50 ஆயிரமும், பாம்பை கொடுத்தவருக்கு 1 இலட்சம் ரூபாவும் நீதிமன்றால் அபராதம் விதிக்கப்பட்டது

அவுருது குமரி போட்டியின் போது மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் மற்றும் அவருக்கு அந்த விலங்கை விற்பனை செய்த சந்தேகநபர் ஆகியோர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து,  தண்டப்பணம் (அபராதம்) விதிக்கப்பட்டுள்ளது.


சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்த இந்தச் சம்பவம் குறித்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பெல்லன்விலயில் அமைந்துள்ள கொழும்பு மாவட்ட வனஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. 


வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் தகவலின்படி, பாதுகாக்கப்பட்ட விலங்கு ஒன்றை பணத்திற்காக வழங்கிய சந்தேகநபரும், அந்த இளம் பெண்ணும் கைது செய்யப்பட்டு, வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


ஜூலை 22 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். 

பாதுகாக்கப்பட்ட விலங்கொன்றை வைத்திருந்தமை மற்றும் நடனத்திற்கு பயன்படுத்தியமைக்காக இளம் பெண்ணிற்கு 50,000 ரூபாயும், பாதுகாக்கப்பட்ட விலங்கை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமைக்காக மற்றைய சந்தேகநபருக்கு 100,000 ரூபாயும் தண்டப்பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.


சட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட எந்தவொரு காட்டு விலங்கையும் வைத்திருப்பது, கொண்டு செல்வது, காட்சிப்படுத்துவது அல்லது விற்பனை செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது எனவும், மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button