கொழும்புக்கு வெளியில் ஏனைய மாவட்டங்களுக்கும் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் 500 மெட்ரோ பேரூந்துகளை களமிறக்க நடவடிக்கை என அறிவிப்பு வெளியானது

கொழும்புக்கு வெளியில் ஏனைய மாவட்டங்களுக்கும் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், அரசாங்கம் மெட்ரோ பேருந்துகளை (Metro bus) 2029 ஆம் ஆண்டளவில் 500 பேருந்துகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய குணசேன, 104 புதிய மெட்ரோ பேருந்துகள் ஏற்கனவே நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், அவை செப்டம்பர் மாதத்திற்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
தற்போது சேவையில் உள்ள 10 மெட்ரோ பேருந்துகள் மற்றும் ஜப்பானில் இருந்து பெறப்பட்ட ஏழு பேருந்துகளுடன் சேர்ந்து, இந்த புதிய தொகுதியானது 121 பேருந்துகளைக் கொண்ட “கொழும்பு மெட்ரோ நகர சொகுசு” (Colombo Metro Urban Luxury) சேவையைத் தொடங்க வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, மெட்ரோ பேருந்து திட்டத்தை கொழும்புடன் மட்டும் கட்டுப்படுத்தாமல் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
2029 ஆம் ஆண்டளவில் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும், இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையும் கொழும்புக்கு வெளியிலான முதலாவது பிரதான மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் அமையும் என்றும் குணசேன கூறினார்.
மூலதனச் செலவின ஒதுக்கீடுகள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதையும், வீதி அமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யப்படுவதையும் அரச அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“பொதுமக்கள் நிதியானது மக்களுக்குச் சொந்தமானது. அபிவிருத்தித் திட்டங்களைத் தாமதப்படுத்துவதற்கு நடைமுறை ரீதியாகவோ அல்லது தர்ம ரீதியாகவோ உரிமை இல்லை” என்று கூறிய குணசேன, அபிவிருத்தி முயற்சிகள் உரிய காலத்தில் நிறைவடைவதை அரசியல் பிரதிநிதிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.



