News

விரும்பிய மாத்திரத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது… – நலிந்த

அரசாங்கத்திற்கோ அல்லது ஜனாதிபதிக்கோ தேவையான மாத்திரத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என்றும், அதற்காக நிலவும் சட்டரீதியான தடைகளை நீக்கி தொகுதி எல்லை நிர்ணயப் பணிகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஹிரு செய்திச் சேவையுடன் கருத்துப் பகிர்ந்துகொள்ளும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வரலாற்றில் முதன்முறையாகத் தங்களது சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சமர்ப்பித்து மக்களுக்குப் பகிரங்கப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

அத்துடன், இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேலும் திறம்படச் செய்வதற்காகத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விளக்கிய அமைச்சர், தேர்தலை நடத்துவதானால் அதற்குரிய சட்டவிதிகள் முறையான வகையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தொகுதி எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அச்சட்டக் கட்டமைப்பு தயாரான உடனே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button