மனதால் இயக்கக்கூடிய இயந்திரங்களை இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை

இலங்கையின் விவசாயத் துறையை நவீன தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்துவதற்காக, மனதால் (சிந்தனையால்) இயக்கக்கூடிய அதிநவீன இயந்திர அமைப்புகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
உலகின் வளர்ந்த நாடுகள் உடலுழைப்பில் இருந்து விடுபட்டு, மனரீதியான உழைப்பை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய நவீன இயந்திரங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பாகச் சீன அரசுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தினார்.
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், உற்பத்தியாளருக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதுடன், நுகர்வோருக்குச் சலுகை விலையில் அரிசியைப் பெற்றுக்கொடுப்பது ஆகிய இரண்டு விடயங்களையும் சமநிலையாகப் பேணுவதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறினார்.
“ஒரு கிலோ நெல்லின் விலையை மாத்திரம் உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டாலும், அரிசியின் விலை உயர்ந்தால் நுகர்வோருக்கு ஏற்படும் அநீதி குறித்தும் நாம் அவதானம் செலுத்த வேண்டும். அதனால் இரு தரப்பினருக்கும் நியாயம் கிடைக்கும் நிலையான தீர்வை நோக்கி நாம் பயணிக்கிறோம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக் காலங்களில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குச் சரியான கவனம் செலுத்தப்படவில்லை என்றும், தற்போதைய அரசு விவசாயிகளின் வேதனையைப் புரிந்து கொண்டு அவர்களுக்குச் செவிசாய்க்கும் ஒரு ஆட்சியாகும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், மண்ணை வளப்படுத்துவதற்குத் தேவையான அறிவியல் அறிவைக் கிராமத்திற்குக் கொண்டு செல்வது மற்றும் நவீன உற்பத்தி உபகரணங்களை வழங்குவது மூலம் விவசாய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் டி.பி. சரத் இங்கு தெரிவித்தார்.



