News

பொய்யை கூறாமல் முஸ்லிம் பெண் ஊழியர்களின் பிரச்சினைக்கு அரச தரப்பு 09 முஸ்லிம் எம்.பிக்களும் ஒன்றிணைந்து தீர்வை பெற்றுக்கொடுங்கள் பார்க்கலாம் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் சவால் !

நூருல் ஹுதா உமர்

தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அரசாங்கத்தை அல்லது அமைச்சரை, ஜனாதிபதியை பகைத்துக்கொள்ள கூடாது என்றால் அமைதியாக இருக்க வேண்டும். கல்முனை வைத்தியசாலை பெண் ஊழியர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக பொய்யை சொல்லி இந்த போராட்டத்தில் இணைந்திருப்பவர்களை மௌனிக்க செய்ய கூடாது. இந்த சமூகப்போராட்டம் ஆதம்பாவா எம்.பி கூறுவது போன்று முடிந்துவிட வில்லை. இனித்தான் ஆரம்பிக்க போகிறது. அந்த பெண் ஊழியர்களுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் சுகாதார அமைச்சுக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மிப்ளால் மௌலவி தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அந்த பெண் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அல்லது அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வைத்தியசாலை நிர்வாகம் தயாராகி வருகிறது. அந்த செயலுக்கு யாரும் அனுமதிக்க முடியாது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதாரப் பணியாளர்கள் தமது சீருடையுடன் மத மற்றும் கலாசார அடையாளத்தைப் பேணும் வகையில் ஸ்கார்ஃப் அணிந்து கடமையாற்றுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு சமூக ஊடகங்களில் விவாதங்களை நடத்துவதற்கு அப்பால், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு நிர்வாக மற்றும் சட்ட ரீதியான தீர்வை வழங்க வேண்டும்.

கடந்த ஏழு, எட்டு நாட்களாக இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை சமூக ஊடகங்களில் அறிக்கைகளாக வெளியிட்டு வருகின்றனர். ஆனால், ஒவ்வொருவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கு ஏற்ப இந்தப் பிரச்சினைக்கு அறிக்கைகள் விடாது நடைமுறைத் தீர்வை பெற்றுக்கொடுப்பதே தற்போது அவசியமாகும்.

“சட்டத்தரணிகள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இதற்காக குரல் எழுப்ப வேண்டும். அரசாங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் நிர்வாக ரீதியாகத் தீர்வு காண வேண்டும். அதற்கு பதிலாக அனைவரும் Facebook, YouTube, WhatsApp போன்ற சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வராது.

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரிகளுடன் எங்களால் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் இந்த விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் நிர்வாகத் தரப்பில் இருந்து, சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்கள் குறிப்பிட்ட சீருடை விதிமுறைகளுக்கு அமைவாகவே கடமையாற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மறுபுறம் அவர்களது சீருடையுடன் மத அடையாளத்தைப் பேணும் வகையில் ஸ்கார்ஃப் அணிவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்.“அரசாங்கம் எந்த சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துகிறது என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஒரு சுற்றறிக்கை இவ்வாறு ஆடை அணிய வேண்டும் எனக் கூறுகிறது என்றால் அதனைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். மற்றொரு நடைமுறை மத அடையாளத்தைப் பேணுவதற்கு இடமளிக்கிறது என்றால் அதையும் தெளிவாக அறிவிக்க வேண்டும். இரண்டு மாறுபட்ட நிலைப்பாடுகள் இருந்தால், அரசாங்கம் அதனைத் தெளிவுபடுத்தி ஒரே நடைமுறையை உருவாக்க வேண்டும்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீடு இடம்பெற்றுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டனர். அதேவேளை, சுகாதார அமைச்சின் தரப்பிலிருந்தும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வைத்தியசாலை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஒன்பது பெண் ஊழியர்களின் எதிர்காலம் தொடர்பில் அரசாங்கம் தெளிவான முடிவொன்றை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

“இந்த ஒன்பது சகோதரிகளின் பிரச்சினை மட்டுமல்ல இது. நாட்டில் அரச ஊழியர்களாகப் பணியாற்றுகின்றவர்கள் தமது மத மற்றும் கலாசார அடையாளங்களை எந்தளவுக்கு பேண முடியும் என்ற அடிப்படையான கேள்வியும் இதில் உள்ளது. எனவே, அரசாங்கம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”
மேலும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

“அரசாங்கத்தில் இருக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் ஒன்றிணைந்து இந்த ஒன்பது சகோதரிகளையும் அதே வைத்தியசாலையில் அவர்களது சீருடையுடன், அதற்கு மேலாக ஸ்கார்ஃப் அணிந்து கடமையாற்றச் செய்ய முடியும் என்றால் செய்து காட்ட வேண்டும். இதுவே இந்தப் பிரச்சினைக்கு உண்மையான முற்றுப்புள்ளியாக இருக்கும்”. அப்படி அரசை செய்விக்க இந்த முஸ்லிம் எம்.பிக்களால் முடியுமா என இந்த ஊடக சந்திப்பில் சவால் விடுக்கப்பட்டது.

கல்முனை என்பது தமிழ்–முஸ்லிம் மக்கள் நீண்டகாலமாக இணைந்து வாழும் பிரதேசம் என்பதால், இவ்வாறான பிரச்சினைகள் சமூகங்களுக்கு இடையிலான பதற்றமாக மாறாமல் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். “இந்தப் பிரச்சினையை முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. இதேபோன்ற ஒரு பிரச்சினை தமிழ் அல்லது சிங்கள சகோதரர் ஒருவருக்கு ஏற்பட்டாலும் அவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். மத அடையாளத்தைப் பேணுவதற்கான உரிமை அனைத்து சமூகங்களுக்கும் சமமாக இருக்க வேண்டும்.

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். மத மற்றும் கலாசார அடையாளங்களை வெளிப்படுத்தும் நடைமுறைகள் தொடர்பில் இதற்கு முன்னரும் பல்வேறு சூழ்நிலைகள் காணப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் பள்ளிவாசலும் கோவிலும் இருக்கிறது, அப்பகுதியில் தமிழ்–முஸ்லிம் மக்கள் நீண்டகாலமாக இணைந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டதுடன், இதுபோன்ற சூழலில் ஒரு ஆடை விவகாரம் தேவையற்ற சமூக முரண்பாட்டுக்குக் காரணமாக மாறக்கூடாது.

அத்துடன், கல்முனை பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து பணியாற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் மத மற்றும் கலாசார அடையாளங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. அங்கு பணியாற்றும் பெண்கள் தமது மத அடையாளங்களைக் காட்டும் வகையில் பொட்டு, விபூதி, பூ அல்லது மத அடையாளங்களைக் கொண்ட ஆடைகளை அணிந்துவரும் சூழ்நிலைகள் காணப்படுகின்றன. அவை பிரச்சினையாக மாற்றப்படுவதில்லை.

எனவே, கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரத்திலும் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை விடுத்து, அனைத்து சமூகங்களுக்கும் சமமான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும், இந்த விவகாரம் நாளுக்கு நாள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பேசப்படுவதால், நிலைமை மேலும் பதற்றமடையக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இது Facebook மற்றும் WhatsApp-ல் பேசிப் பேசி முடித்துவிடக்கூடிய பிரச்சினை அல்ல. சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் அரசாங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது, ஆனால் இத்தகைய அரசியல் வாய்ப்புகள் உருவாகுவதற்கு நிர்வாக ரீதியாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளே காரணமாகின்றன. எதிர்க்கட்சி அரசியல் செய்கிறது என்று கூறுவதற்கு முன்னர், இப்படியான அரசியல் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது யார் என்பதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும். விதிமுறைகள் தெளிவாக இருந்தால், அவற்றை மீறும் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நடவடிக்கை எடுக்காமல் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிடுவது தீர்வாகாது.

அதேவேளை, வைத்தியசாலை நிர்வாகம் நடைமுறையில் உள்ள அரச சுற்றறிக்கைகளை மீறியிருந்தால், அதற்கு எதிராக உரிய நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தின் அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கல்முனை போன்ற உணர்வுபூர்வமான பிரதேசங்களில் சிறிய நிர்வாகப் பிரச்சினைகள் கூட இன மற்றும் மத ரீதியான பதற்றங்களாக மாறாத வகையில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

கல்முனையில் ஏற்கனவே பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் நீதிமன்றங்களையும் சட்டரீதியான வழிகளையும் நாடி வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில் ஒரு சிறிய நிர்வாகப் பிரச்சினைகூட பெரிய சமூகப் பிரச்சினையாக மாறுவதற்கு இடமளிக்கக்கூடாது. மேலும், சமூக ஊடகங்களில் ‘லைக்’, ‘கமெண்ட்’, ‘வீடியோ விவாதம்’ போன்றவற்றை மேற்கொள்வதைத் தாண்டி சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் வெற்றி பெறுவதற்கான வழிகளைத் தேட வேண்டும்.

இறுதியாக, இந்த விவகாரம் அரசாங்கத்தின் தேவைக்காகவா, தமிழ்- முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கூட்டணிகளின் தேவைக்காகவா அல்லது எதிர்கால மாகாண சபை தேர்தல் அரசியலுக்காகவா பயன்படுத்தப்படுகிறது என்ற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அதனைத் தாண்டி உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அரசாங்கம் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். சீருடையுடன் ஸ்கார்ஃப் அணிந்து கடமையாற்றலாம் என்றால் அதனைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். முடியாது என்றால் அதற்கான சட்ட மற்றும் நிர்வாக அடிப்படையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஆனால் தெளிவற்ற நிலை தொடரக் கூடாது. இந்த ஒன்பது பெண் ஊழியர்களின் பிரச்சினைக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கும் தெளிவான கொள்கை ஒன்று தேவை” என ஊடக சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

Recent Articles

Back to top button