ஐந்து கஞ்சா தோட்டங்களை முற்றுகையிட்ட பொலிஸார், ஒன்றை மாத்திரம் தீயிட்டு அழித்துவிட்டு மீதமுள்ள கஞ்சா தொகையையும் 5 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தையும் வாங்கி சென்ற சம்பவம் – பின்னர் இடம்பெற்ற எதிர்பாரா விசாரணையால் நான்கு பொலிஸார் சிக்கினர்

தானமல்பவில, நிகவெவ, தெமோதர வெவ பிரதேசத்தில் உள்ள கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்டு, சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 5 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணம் பெற்றதாகக் கூறப்படும் மொனராகலை மாவட்ட குற்றப்பிரிவைச் சேர்ந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மொனராகலை மாவட்ட குற்றப்பிரிவில் இணைக்கப்பட்டு சேவையாற்றும், யுடகானாவ, புத்துலவைச் சேர்ந்த 37 வயதுடைய காவல்துறை சார்ஜன்ட், சிறிபுர, தெஹியத்தகண்டியவைச் சேர்ந்த 45 வயதுடைய காவல்துறை சார்ஜன்ட், மெத்தகம, பிபிளவைச் சேர்ந்த 39 வயதுடைய காவல்துறை சாரதி கான்ஸ்டபிள் மற்றும் கியுவலபிடலந்த, பிபிளவைச் சேர்ந்த 36 வயதுடைய காவல்துறை கான்ஸ்டபிள் ஆவர்.
தானமல்பவில, நிகவெவ, தெமோதர வெவ அருகில் கஞ்சா தோட்டம் ஒன்று உள்ளதாக தானமல்பவில பிரதான காவல்துறை பரிசோதகருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதற்கமைய காவல்துறை குழுவொன்றினால் கடந்த 11 ஆம் திகதியன்று குறித்த பிரதேசத்தை முற்றுகையிட்டு கஞ்சா தோட்டத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் சுற்றாடலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபருக்குச் சொந்தமான மேலும் மூன்று கஞ்சா தோட்டங்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
அது தவிர மற்றொரு கஞ்சா தோட்டமும் வெட்டி எரிக்கப்பட்டிருப்பதைக் கண்ட காவல்துறையினர் இது குறித்து சந்தேக நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன்போது, கடந்த 10 ஆம் திகதியன்று மொனராகலை மாவட்ட குற்றப்பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் வந்து இங்கு முற்றுகையிட்டதாகவும், அதற்கு எதிராக சட்டம் செயற்படுத்தாமல் இருப்பதற்காக தன்னிடம் ஐந்து இலட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த அதிகாரிகள் குழு அங்கு காணப்பட்ட ஐந்து கஞ்சா தோட்டங்களில் ஒன்றை மாத்திரம் தீயிட்டு அழித்துவிட்டு, மீதமுள்ள கஞ்சா தொகையை எடுத்துச் சென்றதாகவும் விசாரணைகளின் போது அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், நிகவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ‘களு’ எனப்படும் நபரும் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, மொனராகலை மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் ஆறு பேர் வந்து இந்த கஞ்சா தொகையைக் காய வைக்குமாறு தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அதற்கமைய அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தானமல்பவில காவல்துறையினரால் குறித்த சந்தேகத்திற்கிடமான நான்கு காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.



