News

சுகாதார உடைப் பிரச்சினைக்கு தீர்வு அஷ்ரப் வைத்தியசாலைக்கு இடமாற்றம் என்றால் – ஒரே நாட்டில் இரண்டு சட்டங்களா ? அரசின் தீர்மானம் சரியானதா ?

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றும் 09 முஸ்லிம் பெண்களின் மத அடையாளத்துடன் சீருடை அணிவது தொடர்பில் நாடு முழுவதும் பெரும் விவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான தீர்வாக சுகாதார அமைச்சின் தீர்மானத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் 2026.08.17 அன்று முதலில் வெளியிட்டமை தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையும் கடுமையான சந்தேகமும் உள்ளது.

2026.08.17 அன்று அந்த பாராளுமன்ற உறுப்பினர், சுகாதார உதவியாளர்களை கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான தீர்மானம் சுகாதார அமைச்சில் இருந்து கிடைத்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல் 2026.08.18 அன்று பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுகாதார அமைச்சரும் அதே தீர்மானத்தை உறுதிப்படுத்தினார்.

இங்கு எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், அரசாங்கத்தினதும் சுகாதார அமைச்சரினதும் அதிகாரபூர்வ தீர்மானம், பாராளுமன்றத்திலோ அல்லது அதிகாரபூர்வமாகவோ அறிவிப்பதற்கு முன்னர், எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எவ்வாறு தெரிய வந்தது என்பதுதான்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களினதும் உரிமைகளையும் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்தே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. பாராளுமன்றத்தில் கூட அந்த அரசின் உறுப்பினர்கள், முஸ்லிம் மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி தாங்கள்தான் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் இலங்கையின் முதலாவது அமைச்சரவையில் இருந்து கோட்டாபய அரசாங்கம் வரை இருந்த முஸ்லிம் அமைச்சரவை பிரதிநித்துவம் கூட இந்த அரசில் இல்லை.

விஜித ஹேரத் அமைச்சர் சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சந்திப்பிலும், சுகாதார அமைச்சர் கடந்த வார ஊடக சந்திப்பிலும், சுகாதார பணியாளர்களுக்கு சீருடை தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், பிரச்சினை இருந்தால் அதை தீர்ப்போம் என்றும் தெரிவித்தனர். ஆனால் இப்போது நடப்பது என்னவென்றால், பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு பதிலாக, அதை மேலும் தீவிரப்படுத்தி சில அடிப்படைவாத அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்படுவதாகும். இது இந்த நாட்டு முஸ்லிம் மக்களின் ஜனநாயக நம்பிக்கைக்கு விடப்பட்ட அடியாகும்.

பல தசாப்த கால யுத்தத்தின் பின்னர் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அரசியலுக்கு வந்த தமிழ் சமூகத்தின் சில தலைவர்கள், இன்று நிர்வாக மட்டத்தில் தமது அநியாயமான கோரிக்கைகளை நேரடியாக நிறைவேற்றிக் கொள்வதும், அரசாங்கம் அதற்கு துணை போவதும் கவலைக்குரிய விடயமாகும்.

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் பணியாற்ற வந்த முஸ்லிம் சகோதரிகளுக்கு அந்த வைத்தியசாலையில் அடையாளத்துடன் உடை அணிய முடியாது என்று கூறி, அவர்களை அஷ்ரப் வைத்தியசாலைக்கு மாற்றுவதன் மூலம் அரசாங்கம் கொடுக்கும் மறைமுக செய்தி என்னவென்றால், அடையாளத்துடன் அஷ்ரப் வைத்தியசாலையில் உடை அணியலாம் என்பதாகும். இதிலிருந்து வடக்கு-கிழக்கு மாகாணத்தில் ஒரே நாட்டில் இரண்டு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகிறதல்லவா?

எனவே அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு “தலைவலிக்கு தலையணையை மாற்றும்” வேலையை செய்யாமல், உடனடியாக நிலையான தீர்வை வழங்க வேண்டும். கல்முனை வடக்கு வைத்தியசாலையில் பணிக்கு வந்த அந்த முஸ்லிம் சகோதரிகளை அந்த வைத்தியசாலையிலேயே இணைத்து, அவர்களின் அடையாளத்துடன் கடமையாற்ற அனுமதி வழங்குவதன் மூலமே அரச ரீதியான தீர்வாக அமைய முடியும். அவ்வாறின்றி சில அடிப்படைவாத கருத்துக்களைக் கொண்ட தரப்புகளை திருப்திப்படுத்துவதற்காக இடமாற்றம் வழங்குவது ஜனநாயக தீர்வு அல்ல.

நாட்டின் சட்டமும் அடையாள உரிமையும் அனைத்து சமூகங்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். இல்லையேல் சகவாழ்வுக்கு ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும்.

கலீலுர் ரஹ்மான்

பொதுச் செயலாளர்,

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

2026.08.18

Recent Articles

Back to top button