News

அன்று தமிழ் ஊழியர்களின் மத கலாச்சார உரிமைகள் பறிக்கப்பட்ட போது, தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப், “தமிழர்களுக்கு கிடைக்கா விட்டால் முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்காது” என்று உரக்கக் கூறி உரிமைகளை பெற்றுக்கொடுத்த சம்பவம்

✍🏻 MOHAMED BIN LATHEEF

1995 களின் நடுப்பகுதியில் சந்திரிக்கா அரசில் இலங்கை ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிக்கும் பெண் தொகுப்பாளர்கள் யாரும் தமது மத அடையாளங்களை வெளிக்காட்டும் வகையில் அடையாளங்களை அணியக்கூடாது என்ற கடுமையான உத்தரவு மேலிடத்திலிருந்து பிறப்பிக்கப்பட்டது.

இந்த விதியினால் பாரம்பரியமாகப் பொட்டு வைத்து செய்தி வாசித்து வந்த தமிழ் பெண் ஊடகவியலாளர்கள் பெரும் சிரமத்திற்கும் நெருக்கடிக்கும் உள்ளாகினர் அவர்களின் உரிமைகள் தற்காலிகமாக மறுக்கப்பட்டன.

இந்தச் சூழலில் பாதிக்கபட்டோருக்காகக் குரல் கொடுக்க ஆளுங்கட்சியில் நேரடியான தமிழ் பிரதிநிதிகள் இல்லாத ஒரு சூழல் நிலவியது.

அந்த இக்கட்டான காலகட்டத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பதற்காகவும் தன் குரலை உயர்த்தத் துணிந்தார் அப்போதைய அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சராக விளங்கிய இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) ஸ்தாபகர் மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் அவர்கள்.

நியாயத்தின் பக்கம் நின்ற தலைவர்
சமூக நீதிக்கும் மனித உரிமைக்கும் எவ்வித சமரசமும் செய்யாது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் நியாயங்களை அழுத்தமாக எடுத்துரைத்து தமிழ் பெண்களுக்குப் பொட்டு வைக்கும் உரிமையை மீண்டும் பெற்றுக் கொடுத்தார் மர்ஹூம் அஷ்ரப்.

சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளுக்காக எப்போதும் போராடும் அவரது இந்த நடவடிக்கை ஆரம்பத்தில் SLMC கட்சிக்குள்ளேயே சில சிறிய சலசலப்புகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

முஸ்லிம்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக் கொடுக்காமல் தமிழர்களுக்காக அவர் ஏன் உழைக்க வேண்டும் என்ற கேள்விகள் சில மட்டங்களில் எழுப்பப்பட்டன.

வரலாற்றுப் புகழ்பெற்ற அந்தப் பதில்
கொள்ளுப்பிட்டி மேமன் மண்டபத்தில் நடைபெற்ற SLMC கட்சியின் பேராளர் மாநாடு ஒன்றில் தனக்கெதிரான விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் அவர் மிக ஆழமான, சமத்துவமானதொரு பதிலைப் பதிவு செய்தார்.

வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் பதிலை அந்தத் தருணத்தில் அவர் உரக்கச் சொன்னார் ..

“தமிழர்களுக்கு கிடைக்கா விட்டால் முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்காது.”

இந்த ஒற்றை வாக்கியம் அனைத்துச் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்ததுடன் சிறுபான்மைச் சமூகங்கள் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்துள்ளவை என்ற மாபெரும் உண்மையை உணர்த்தியது.

தனிப்பட்ட குறுகிய வட்டங்களுக்கு அப்பால் நின்று சக மனிதனின் உரிமையைப் பேணுவதே உண்மையான அரசியல் அறம் என்பதை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அன்று தனது செயல் மூலம் நிரூபித்துக் காட்டினார்.

பொட்டும் பூவும் எப்படி ஓர் இனத்தின் அடையாளமோ அதே போன்று முக்காடும் ஓர் இனத்தின் அடையாளம் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அன்று முஸ்லிம் தலைவன் தமிழ் பெண்களின் உரிமையை போராடி பெற்றுக் கொடுத்தான் இன்றும் வரலாற்றில் பேசப்படுகின்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button