தொலைக்காட்சி தொகுப்பாளர் சாரா கலீஃபா உட்பட 12 பேருக்கு மரண தண்டனை
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்டதால், எகிப்தின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான சாரா கலீஃபா (Sarah Khalifa) உட்பட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்கள் என அரசுக்குச் சொந்தமான ‘அல்-அஹ்ராம்’ (al-Ahram) நாளிதழ் தெரிவிக்கிறது.
இதுதவிர, சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
39 வயதான சாரா கலீஃபா, குற்றங்கள் தொடர்பான தகவல்களைக் கொண்டு வந்த ‘மிஷன் இம்பாசிபிள்’ (Mission Impossible) என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பதுடன், அவர் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இந்த நீதிமன்றத் தீர்ப்பு, எகிப்திய சட்டப்படி அந்நாட்டின் தலைமை முஃப்தியின் (Grand Mufti) மதக் கருத்து பெறப்பட்டதன் பின்னர், ஒரு மாதத்திற்குப் பிறகு இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணையின் போது 750 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களையும், அதற்காகப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக 20 சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளதுடன், காணொளிகள் மற்றும் உரையாடல்கள் அடங்கிய மின்னணு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
‘அக்பார் அல்-யோம்’ (Akhbar al-Youm) நாளிதழின் படி, கடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த சாரா கலீஃபா, போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் புகைப்படங்கள் எடுக்கப்படுவதற்கு முன்பு வரை தான் ஒருபோதும் போதைப்பொருளைப் பார்த்தது கூட இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பின் 2025 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, அந்த ஆண்டில் எகிப்தில் 492 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 23 பேருக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதாரம் – பிபிசி



