News

இலங்கையில் ஒரே ஆண்டில் 46.3 சதவீதமான சிறுவர்கள் இணையத்தில் அறிமுகமில்லாதவர்களுடன் தொடர்புகொண்டுள்ளனர் – 27 சதவீதமானோர் இணையவழி துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் –  ஐந்து சிறுவர்களில் ஒருவரின் ஆபாசமான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்படுகிறது ; பைசர் முஸ்தபா

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டத்தை விரைவுபடுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். இளைஞர்களின் மனநலம், பாதுகாப்பு மற்றும் கல்விக்கு ஏற்படும் கடுமையான ஆபத்துகள் குறித்து அவர் எச்சரித்துள்ளார்.

நேற்று (08) ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதத்தில் உரையாற்றிய முஸ்தபா, குறைந்தபட்ச வயது வரம்பு தொடர்பான தனிநபர் தனியார் சட்டமூலமொன்றை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், நீதிமைச்சருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து அது தற்போது சட்ட வரைபு கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நடவடிக்கை “தொழில்நுட்பத்திற்கு எதிரானது” அல்ல, மாறாக இணையவழி தீங்குகளில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு அத்தியாவசிய நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்டிய அவர், இதற்காக கூட்டு முயற்சியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச முன்னுதாரணங்களை மேற்கோள் காட்டிய முஸ்தபா, ஐக்கிய இராச்சியத்தின் குழந்தைகள் நலன் மற்றும் பாடசாலைகள் சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்புச் சட்டம், அத்துடன் ஆஸ்திரேலியாவின் சமூக ஊடக குறைந்தபட்ச வயதுச் சட்டம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார். இலங்கையின் முன்மொழிவு இன்ஸ்டாகிராம் (Instagram), டிக்டாக் (TikTok), யூடியூப் (YouTube), ஸ்னாப்சாட் (Snapchat), பேஸ்புக் (Facebook) மற்றும் ட்விட்டர் (Twitter) போன்ற தளங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் அதேவேளையில், வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற தகவல் தொடர்பு சேவைகளுக்கு விலக்கு அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிர்ச்சியூட்டும் தரவுகளை முன்வைத்து முஸ்தபா இந்த நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தினார். சைப்ரஸ்பேஸ் (cyberspace) அச்சுறுத்தல்களில் இலங்கை உலகளவில் 20ஆவது இடத்தில் உள்ளதுடன், ஒரே ஆண்டில் 9.1 மில்லியன் அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார். இளைஞர்களில் 52.8 சதவீதமானோர் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும், அவர்களின் சராசரி பயன்பாடு 13 வயதில் தொடங்குவதாகவும் அவர் கூறினார். கவலையளிக்கும் விதமாக, 46.3 சதவீதமான சிறுவர்கள் இணையத்தில் அறிமுகமில்லாதவர்களுடன் தொடர்புகொண்டுள்ளனர், அவர்களில் 27.9 சதவீதமானோர் பின்னர் அவர்களை நேரில் சந்தித்துள்ளனர். இளம் இணைய பயனர்களில் 28 சதவீதமானோர் இணையவழி வன்முறையை எதிர்கொண்டுள்ளதுடன், 27 சதவீதமானோர் இணையவழி துன்புறுத்தல் (cyberbullying) மற்றும் கப்பம் கோரல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர். ஐந்து சிறுவர்களில் ஒருவர் தங்களின் ஆபாசமான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்படுவதாகத் தெரிவித்துள்ளனர், மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் 92 சதவீதமானோர் இதுபோன்ற சம்பவங்களைப் புகாரளிப்பதே இல்லை. குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களின் புழக்கம் 1,000 பேருக்கு 27.8 என்ற அளவில் உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

கட்டுப்பாடற்ற பயன்பாடானது பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் தூண்டுதல், இணையத்தில் சந்தித்த அந்நியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல் மற்றும் இணைய அடிமைத்தனத்தால் ஏற்படும் இளைஞர்களின் தற்கொலைகளுக்கு வழிவகுத்துள்ளதாக முஸ்தபா எச்சரித்தார்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சாதனப் பழக்கங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் விரக்தியடைந்துள்ளதாகவும், ஒரு சட்டப்பூர்வ தடையை ஒரு வெளிப்புற எல்லையாக அவர்கள் வரவேற்பார்கள் என்றும் அவர் கூறினார். “இன்று சிறுவர்களின் சிறந்த நண்பனாக தொலைபேசி மாறியுள்ளது” என்று வருந்திய அவர், தனிமைப்படுத்தல், சமூக வீழ்ச்சி மற்றும் மனநலச் சிக்கல்கள் குறித்து உளவியலாளர்கள் எச்சரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

தனது உரையை நிறைவு செய்த முஸ்தபா, வயது சரிபார்ப்பு வழிமுறைகளை நிறுவவும், சமூக ஊடகத் தளங்களைப் பொறுப்புக்கூறச் செய்யவும் நாடாளுமன்றம் விரைவாகவும் கூட்டாகவும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

“இந்த சட்டமூலம் தாமதமாகும் ஒவ்வொரு நாளும், ஒரு சிறுவர் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது… ஒருசிறுவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வருகிறது… மேலும் ஒரு குழந்தை பல்வேறு வடிவங்களிலான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறது,” என்று எச்சரித்த அவர், இலங்கையின் சிறுவர்களை பாதுகாக்க உடனடி சட்ட நடவடிக்கை மிக முக்கியமானது என அழுத்தமாகக் கூறினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button