News

வளர்ப்பு நாயைப் பதிவு செய்யத் தவறினால், பதிவுக் கட்டணத்துடன் மேலதிகமாக 2,000 ரூபா அபராதம் !

வெறிநாய்க்கடியை ஒழிப்பதற்கும் நாய்கள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்துவதற்கும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சட்டமூலம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமானது, நாய்களுக்கான தடுப்பூசி ஏற்றலை ஒழுங்குபடுத்துதல், நாய்களின் சனத்தொகையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக நாய்களை இனப்பெருக்கம் செய்வதை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றத்தின் நிர்வாக எல்லைக்குள் உள்ள ஒவ்வொரு நாய்க்கும் ஆண்டுதோறும் வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டு, சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இதற்கமைவாக, ஆறு வாரங்களுக்கு மேற்பட்ட வயதுடைய நாயை வளர்க்கும் உரிமையாளர் அல்லது அதனைத் தமது பொறுப்பில் வைத்திருக்கும் எவரும், அந்த நாய்க்கு வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளதையும், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தில் ஆண்டுதோறும் அது பதிவு செய்யப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசி ஏற்றப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர், நிர்ணயிக்கப்பட்ட பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தில் நாயைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் நாய்க்கான பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

நாயைப் பதிவு செய்யத் தவறினால், பதிவுக் கட்டணத்துடன் மேலதிகமாக 2,000 ரூபா அபராதம் விதிப்பதற்கும் முன்மொழியப்பட்ட சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றமும் தனது நிர்வாக எல்லைக்குள் உள்ள அனைத்து வீதி நாய்களுக்கும் கருத்தடை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

நாய் இனப்பெருக்க நிலையங்களை (dog breeding center) நடத்தும் எவரும் அதற்கான உரிமத்தைப் (Licence) பெற வேண்டும் என்றும், அத்தகைய உரிமம் இன்றி வர்த்தக நோக்கத்திற்காக எந்தவொரு நபரும் நாய்க்குட்டிகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் இந்தச் சட்டமூலம் முன்மொழிகிறது.

Recent Articles

Back to top button