வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தனது காலணிகளில் மறைத்து ஐஸ் மற்றும் ஹெராயின் போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற சிறை அதிகாரி சிக்கினார்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் மறைத்து போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற சிறை அதிகாரி ஒருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்குள் சிறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றும் சிறை காவலர் ஒருவராவார்.
சந்தேகநபரான அதிகாரி அணிந்திருந்த காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 16.7 கிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்



