News

எரிபொருள் பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதி தலையிட வேண்டும்..

நாட்டின் தற்போதைய எரிபொருள் விநியோகச் சிக்கல்களில் நேரடியாகத் தலையிட்டு, அப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதற்கு உரிய தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய எரிபொருள் விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதால் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி RM Park, Sinopec மற்றும் LIOC ஆகிய தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தங்களது நஷ்டத்தைக் குறைக்கும் நோக்கில் இந்நிறுவனங்கள் இவ்வாறான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

தனியார் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ள போதிலும், இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் (CPC) எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகித்து வருவதால் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் சில பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மட்டுமே இயங்குவதால், அங்குள்ள பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த அரசாங்க காலத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தடையற்ற எரிபொருள் விநியோகத்தை வழங்குவோம் என்ற வாக்குறுதியுடன் உலகின் முன்னணி எரிபொருள் விநியோக நிறுவனங்கள் இலங்கைக்குள் வந்தன. அவர்களுக்குச் சந்தைப் போட்டி விலையில் எரிபொருளை விற்பனை செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஆனால், அந்நிறுவனங்கள் இலங்கையில் தமது வணிகத்தைத் தொடங்கிய பிறகு, அரசாங்கத்தின் நிர்ணய விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தாங்கள் நிர்ணயிக்கும் விலையை விடக் குறைந்த விலைக்கு எரிபொருளை விநியோகிக்க நேரிட்டால், அதனால் ஏற்படும் நஷ்டத்தை அரசாங்கமே ஏற்கும் என உறுதியளிக்கப்பட்டிருந்ததாக அந்த நிறுவனங்கள் தெரிவிப்பதாகக் கூறிய ராஜபக்ஷ, இந்த நிலைமையினால் பொதுமக்கள் மட்டுமன்றி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button