மஹிந்த ராஜபக்ஷ உயிருடன் இருக்கும் வரை, தேவைப்பட்டால் அவரை சக்கர நாற்காலியில் அல்லது கட்டிலில் வைத்தாவது அரசியல் மேடைக்கு கொண்டுவந்து மக்களுக்குக் காட்டுவோம் ; இந்திக அனுருத்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிருடன் இருக்கும் வரை, தேவைப்பட்டால் சக்கர நாற்காலியிலாவது அவரை அரசியல் மேடைக்குக் கொண்டுவந்து மக்களுக்குக் காட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய சுகாதார நிலையைக் கருத்திற்கொண்டு அவரைத் தொடர்ந்து மேடைக்கு அழைப்பது ஏன் என ஊடகவியலாளர்கள் இங்கு வினவியபோது, அதற்குப் பதிலளித்த அவர், மஹிந்த ராஜபக்ஷ தமது அரசியல் நீரோட்டத்தின் முன்மாதிரியான தலைவர் எனக் கூறினார்.
மக்கள் எப்போதும் உண்மையான தலைவர்களைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதால், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் கட்டிலில் வைத்தாவது அவரை மக்கள் முன் கொண்டுவருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், 88-89 பீதி காலத்தில் அச்சுறுத்தல் ‘துண்டுப் பிரசுரங்கள்’ மூலம் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராமப்புறக் கடைகளை மூடச் செய்த, விகாரைகளில் பிரித் பாராயணங்களை நிறுத்திய, அத்துடன் ஆசிரியர்கள் கற்பிப்பதைக் கூடத் தடைசெய்த பயங்கரவாதக் குழுக்களே இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டுப் பேரணி தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்திக அனுருத்த, இன்று அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவி வகிக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த காலத்தில் செயற்பட்ட விதம் குறித்துத் திரும்பிப் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், அரசாங்கத்தைக் கைப்பற்றிய போதிலும் அரசு அதிகாரம் இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறி, மீண்டும் ஒரு போராட்டத்திற்குத் தயாராகுமாறு ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் செய்யும் அறிக்கைகள் மூலம் நாட்டிற்கு முன் பாரதூரமான மற்றும் அபாயகரமான சூழ்நிலை உருவாகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



