News

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை உயர்மட்டத்தில் தீவிரப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அம்பாறை மாவட்டம், கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை உயர்மட்டத்தில் தீவிரப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக அறியமுடிகிறது.



அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து, அவரைப் பாதுகாப்பாக விடுவிப்பதற்குத் தேவையான சட்ட, இராஜதந்திர மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்தையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.



எனினும், ஜனாதிபதி இவ்வாறான நேரடி பணிப்புரையை வழங்கியமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை நேற்று வரை வெளியிடப்படவில்லை. அனோஜனின் வழக்கை அரசாங்கம் மிக நெருக்கமாகக் கண்காணிப்பதுடன் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.



மரண தண்டனை குறித்து எழுத்துமூல தீர்ப்பு இல்லை



அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வாய்மொழியாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சவூதி நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ எழுத்துமூல தீர்ப்பு இலங்கைத் தூதரகத்துக்கு இன்னமும் கிடைக்கவில்லை.



இதனால் மரண தண்டனை குறித்த இறுதி சட்ட நிலைமை, அதற்கான சட்ட அடிப்படை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் எழுத்துமூல தீர்ப்பைப் பெற்ற பின்னரே முழுமையான தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, அந்தத் தீர்ப்புக்கு எதிராக சவூதி அரேபியாவின் உயர்நீதிமன்றத்தில் ஒரு மாதத்துக்குள் மேன்முறையீடு செய்ய முடியும் என அனோஜனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



பேஸ்புக் comment ஏற்படுத்திய விபரீதம்



நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார்.



சமூக ஊடகத்தில் இடம்பெற்ற மதம் தொடர்பான விவாதமொன்றின்போது அவர் வெளியிட்ட கருத்து இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து சவூதி அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு அல்அஹ்சா குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது



முதற்கட்ட விசாரணையின் பின்னர் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையைக் குறைக்கும் நோக்கில் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை (17) நடைபெற்ற மேன்முறையீட்டு விசாரணையில் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக அவரது சட்டத்தரணி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனினும், இந்த மரண தண்டனையை உறுதிப்படுத்தும் சவூதி நீதிமன்றத்தின் எழுத்துமூல தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்பதால், வெளிவிவகார அமைச்சு இந்த விவகாரத்தை மிகுந்த அவதானத்துடன் கையாள்கிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button