16 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டுள்ள முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது – கணவரின் சிறைத்தண்டனையில் செல்வாக்கு செலுத்தும் நோக்கில் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு 50,000 ரூபாய் லஞ்சம் கொடுக்கமுயன்ற போது கைது

முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தா ஹெட்டியாரச்சி, நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு 50,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது கணவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிப்பதில் செல்வாக்கு செலுத்தும் நோக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்ட அலுவலக உதவியாளர் ஒருவருக்கு இந்த லஞ்சத்தை வழங்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபரை லஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) கைது செய்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பல ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



