சூரியசக்தி மின் திட்டங்கள் குறித்து IMF பிரதிநிதியிடம் சஜித் கவலைகளை வெளியிட்டார்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டாக்டர் மார்த்தா டெஸ்பாயே வோல்டெமைக்கேலைச் (Dr. Martha Tesfaye Woldemichael) சந்தித்து, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நமது நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்திக்கு விடுக்கப்படும் மரண அடி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்த்தா டெஸ்பாயே வோல்டெமைக்கேலை இன்று சந்தித்து, தற்போதைய அரசாங்கம் சூரிய சக்தி திட்டங்களை இல்லாதொழிப்பதற்கு மேற்கொண்டுள்ள கொள்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெளிவுபடுத்தினார்.
தற்பொழுது நிலைபேறான வலுச்சக்தி மற்றும் சூரிய சக்தியை அழித்தொழிக்கும் பல கொள்கைகளை இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. சூரிய சக்தியின் ஊடாக நுகர்வோருக்கு குறைந்த விலையில் மின்சார அலகைப் பெற்றுக் கொடுப்பதும், இளைஞர்களை தொழில் ரீதியில் திறமையான தொழில்முனைவோராக உருவாக்குவதும் இதன் ஊடாக நடந்து வந்து வருகின்றன.
இருந்த போதிலும், நிலையான வலுச்சக்தியை ஜனநாயகமயப்படுத்துவதன் ஊடாக சிறிய அளவிலான தொழில்முனைவோருக்கு பக்கபலமளிக்கும் வேலைத்திட்டத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் முற்படுகின்றது. நாட்டுக்கு சூரிய சக்தி எவ்வாறெல்லாம் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகிறது என்பது தொடர்பான பல விடயங்களை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையினால், சூரிய சக்தியைப் பாதுகாத்துக் கொள்வது குறித்தும், மின்கல (Battery) கட்டமைப்பின் அவசியத்தை அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்துமாறும், இந்த கூரையின் மீதான சூரிய சக்தி அமைப்புகள் ஊடாக தேசிய மின் வலையமைப்பிற்கு 2,500 மெகாவாட் இணைக்கப்படுவதால் மாதமொன்றுக்கு 25 பில்லியன் ரூபா நாட்டுக்கு சேமிக்கப்படுகின்றன.
இவ்வாறான நாட்டிற்குச் சாதகமான சூழ்நிலை காணப்படுகின்ற போதிலும் டீசல் மாபியா கும்பலினால் டீசல் மாபியாவை பிரபல்யப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதுமாத்திரமன்றி, யுகதனவி, சொபாதனவி மற்றும் சஹச்தனவி ஊடாக LNG மற்றும் டீசல் கலப்புடன் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, FSR இன்றி இணைக்கப்பட்ட சுழற்சி மின் நிலைய (Combined Cycle Power Plant) எண்ணக்கரு ஊடாக எரிபொருள் மாபியா மற்றும் டீசல் மாபியாவின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படுகின்றன.
220 இலட்சம் மக்கள் சார்பாக இதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும், 70 சதவீத புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியுடன் மட்டுப்படுத்தாமல், 100 சதவீத புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி இலக்கை நோக்கிச் செல்ல அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறோம். இதன் பொருட்டு முன்னெடுக்க முடியுமான உச்சபட்ச ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை நாம் முன்னெடுப்போம் என அவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்



