எரிபொருள் விலை உயர்வுக்கு அரசாங்கம் காரணம் அல்ல… நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி
தற்போதைய ஆட்சியின் கீழ் நாட்டில் எரிபொருள் விலை உயர்த்தப்படுவது எந்த வகையிலும் அரசாங்கத்தின் மோசடி, ஊழல் அல்லது வீண்விரயம் காரணமாக இடம்பெறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய எரிபொருள் விலை மாற்றங்களுக்கு சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களே நேரடிக் காரணம் என வலியுறுத்தினார்.
குறிப்பாக, உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக அமைதியான சூழ்நிலை குலைந்துள்ளமை, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இறக்குமதிச் செயல்பாட்டில் டாலருக்கு நிகரான செலவு அதிகரிப்பு ஆகியவை உள்ளூர் சந்தையில் விலை உயர்த்தப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டினார் .
இருப்பினும், இத்தகைய உலகளாவிய சவால்கள் நிலவிய போதிலும், நாட்டில் நெருக்கடி நிலை உருவாகாதவாறு பார்த்துக்கொண்டதாகக் கூறிய அவர், பொதுமக்கள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் நாட்டில் ஒரு மணிநேரமேனும் எரிபொருள் இல்லாத நிலை உருவாவதற்கு தற்போதைய அரசாங்கம் இடம் அளிக்கவில்லை என்றும் மேலும் தெரிவித்தார் .



