News

காலி கடலில் தங்கியுள்ள ஈரானிய கப்பல்கள் இலங்கை அரசிடம் உணவு, குடிநீர் கோரிக்கை.. இலங்கை மறுப்பு..

இலங்கையின் கடல் எல்லைக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய கச்சா எண்ணெய் கடற்போக்குவரத்து கப்பல்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறு ஈரான் அரசு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ (Sunday Times) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த Sunday Times செய்தியின் தமிழாக்கம் இதோ …

அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகள் குறித்து விநியோகஸ்தர்களுக்கு அமைச்சர் ஹேரத் எச்சரிக்கை; கப்பல்கள் நாட்டின் கடல் எல்லைக்கு வெளியே உள்ளதால் அவற்றுக்கு விநியோகங்களை வழங்க அரசாங்கம் கடமைப்படவில்லை எனத் தெரிவிப்பு

எழுதியவர்: தமித் விக்கிரமசேகர

இலங்கை கடல் எல்லைக்கு வெளியே தங்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்கு விநியோகங்களை வழங்குமாறு ஈரான் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், இச்சேவைகளை வழங்கினால் அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகளுக்கு (Secondary Sanctions) முகங்கொடுக்க நேரிடும் என தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று ‘சண்டே டைம்ஸ்’ (Sunday Times) பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில்,

தற்போது இலங்கை கடல் எல்லைக்கு வெளியே மொத்தம் 47 வெளிநாட்டு கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 15 கப்பல்கள் ஈரானிய கப்பல்கள் என உறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணையை இலக்கு வைத்து அமெரிக்கா மீண்டும் கடற்போக்குவரத்து தடையை விதித்துள்ளதால், பல ஈரானிய கப்பல்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப முடியாமல் கடந்த சில மாதங்களாக இலங்கை கடல் எல்லைக்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஈரானிய கப்பல்கள் நாட்டின் Territorial waters எனப்படும் பிராந்திய கடல் எல்லைக்கு வெளியே அமைந்துள்ளதால், அவற்றுக்கு எவ்வித விநியோகங்களையும் வழங்க இலங்கை அரசாங்கம் சட்டரீதியாகக் கடமைப்படவில்லை என்றும் அமைச்சர் ஹேரத் சுட்டிக்காட்டினார்.

உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை குறித்த கப்பல்களுக்கு வழங்குமாறு ஈரான் அதிகாரிகள் அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்ததை அவர் உறுதிப்படுத்தினார்.

“ஒரு அரசாங்கமாக, நாம் இதுவரை அந்த (ஈரானிய) கப்பல்களுக்கு எதையும் வழங்கவில்லை, இனிமேலும் வழங்க உத்தேசிக்கவில்லை,” என்று திரு. ஹேரத் கூறினார்.

ஈரானிய கப்பல்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க மறுத்தது அமெரிக்க அரசாங்கத்தின் அழுத்தத்தினால் அல்ல என்று மறுத்த அவர், தங்கியுள்ள ஈரானிய கப்பல்கள் குறித்து அமெரிக்கா இதுவரை “உத்தியோகபூர்வமாக எந்தச் செய்தியையும் தெரிவிக்கவில்லை” என்றும் வலியுறுத்தினார். “கப்பல்களுக்கான இவ்வாறான விநியோகங்கள் வழக்கமாக தனியார் துறையினரால் வழங்கப்படுபவை, இது அவர்கள் சம்பந்தப்பட்ட விடயம்” என்றும் அமைச்சர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

இருப்பினும், கச்சா எண்ணெய் இல்லாத வெற்று தாங்கி கப்பல்களான இந்த ஈரானிய கப்பல்கள் அமெரிக்காவின் தடைக்குட்பட்டவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். எனவே, ஏதேனும் ஒரு தனியார் நிறுவனம் அவற்றுக்கு உணவு, நீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தீர்மானித்தால், அது அமெரிக்காவினால் கண்டறியப்பட்டு அந்நிறுவனங்கள் மீது இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படலாம்.

இதன் பொருள், இவ்வாறான ஒரு நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் வர்த்தகத் தொடர்புகளை இழக்க நேரிடும் என்பதுடன், அமெரிக்க வங்கி அமைப்பிலிருந்தே வெளியேற்றப்படவும் கூடும் என்று அமைச்சர் ஹேரத் தெரிவித்தார்.

“எனவே, மிகவும் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயல்படுமாறு நாம் தனியார் துறைக்கு அறிவித்துள்ளோம். இல்லையெனில், அவர்கள் அமெரிக்கத் தடைகளில் சிக்கும் அபாயத்தை எதிர்கொள்வார்கள்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கடல்சார் தடைகளைத் தப்பித்தல் மற்றும் அணுசக்தி கண்டறிதல் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் அண்மையில் தொடர் பயிற்சிப் பட்டறைகளை நடத்தியது.

அமெரிக்கப் பாதுகாப்பு நலன்களுக்கும் முறையான உலகளாவிய வர்த்தகத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் கடல்சார் தடைகளைத் தப்பிக்கும் செயல்களைக் கண்டறிந்து அதற்குப் பதிலளிக்கும் இலங்கையின் திறனை வலுப்படுத்துவதற்காக கடந்த மாதம் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் 40 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

“உலகளாவிய வர்த்தகத்திற்கான ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சந்தியில் இலங்கை அமைந்துள்ளது. இது மிகப்பெரிய வாய்ப்பையும் அதே நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் கொண்டு வருகிறது,” என்று அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயிற்சிப் பட்டறியைத் தொடர்ந்து, அணுசக்தி கடத்தலைக் கண்டறிதல் மற்றும் தடுப்பது குறித்து கடற்படை வீரர்களுக்கு கடந்த வாரம் ஐந்து நாள் பயிற்சியளிக்கப்பட்டது.

அணுசக்தி கடத்தலைக் கண்டறியும் நடவடிக்கைகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை (SOPs) உருவாக்குவதற்காக சர்வதேச சிறந்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புக்கு அமைவாக அமெரிக்க நிபுணர்கள் இலங்கை பங்கேற்பாளர்களுடன் இணைந்து பணியாற்றினர் எனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Recent Articles

Back to top button