News

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத் தொடரில் உரையாற்ற வேண்டிய தருணத்தில்,ஜனாதிபதி கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டங்களில் உரையாற்றிகொண்டிருக்கிறார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிக்கிறார்.

தற்போதைய அரசாங்கத்தின் பலவீனமான இராஜதந்திர செயற்பாடுகளினால் நாடு கடுமையான சர்வதேச நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை போன்ற உயர்மட்ட சர்வதேச மாநாடுகளைப் புறக்கணித்துவிட்டு, ஜனாதிபதி பிராந்திய அரசியல் கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத் தொடரில் உரையாற்ற வேண்டிய தருணத்தில், ஜனாதிபதி ஒரு தூதுவரை அனுப்பிவிட்டு, கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டங்களில் உரையாற்றி எதிர்க்கட்சித் தலைவரின் மனைவியின் செல்லப் பெயர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வளர்ச்சி மற்றும் எதிர்காலப் பார்வை குறித்து சர்வதேச அரங்கில் பேசுவதற்காகவே மக்கள் ஜனாதிபதி ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்களே தவிர, சிறிய அரசியல் கூட்டங்களில் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதற்காக அல்ல என்று கூறிய தொலவத்த, மொழி அறிவுப் பிரச்சினை என்றால் அதற்கு திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கும்போது, சர்வதேச மட்டத்திலான பொறுப்புகளை ஜனாதிபதி தட்டிக்கழிப்பது வெளியுறவு அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் இராஜதந்திர பலவீனத்தை தெளிவாகக் காட்டுகிறது என்றார்.

மேலும், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் அதிக எண்ணிக்கையிலான ஈரானியக் கப்பல்கள் ஏன் நிறுத்தப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பிய அவர், கடந்த காலங்களில் இலங்கையின் கடல் எல்லையில் ஈரானியக் கப்பல் ஒன்று தீப்பிடித்து மூழ்கிய கசப்பான அனுபவங்கள் நாட்டிற்கு முன்பாக இருப்பதாக நினைவூட்டினார். இவ்வாறான தீவிரமான இராஜதந்திரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச தலையீடும் சரியான இராஜதந்திரச் செயன்முறையும் அத்தியாவசியமானது என அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) தொடர்பில் அரசாங்கத்தின் இரட்டை நிலைப் போக்கையும் விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சியில் இருந்தபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியவர்கள், இன்று அதைவிடவும் அடக்குமுறை நிறைந்த புதிய சட்டத்தைக் கொண்டுவரத் தயாராகி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

முந்தைய சட்டத்தின்கீழ் பொலிஸ் அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்படாத நிலையில், சாதாரண பொதுமக்களுடன் பழகுவதற்குப் போதிய பயிற்சியோ அனுபவமோ இல்லாத இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்குப் புதிய சட்டத்தின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்,சட்டத்தை நீக்குவதாக அளித்த வாக்குறுதிகளை மீறி அரசாங்கம் மக்களை அடக்கித் தன் அதிகாரத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பதாகவும் பிரேமநாத் சி. தொலவத்த மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button