ஞானசார தேரரை விடுவிக்கக்கோரிய நடை பயணத்தில் ஆதரவாளர் தாக்கப்பட்டதாக பொய் வீடியோ பரப்பி பொலிஸாரிடம் சிக்கிக்கொண்ட தேரர் – பொய் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவிப்பு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்கக்கோரி, கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நடத்தப்பட்ட நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்த நபர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர்.
வீரகொட பொலிஸ் பிரிவில் அக்டோபர் 14 அன்று இச்சம்பவம் நடந்துள்ளதாகவும், இது நடைபயணத்துடன் தொடர்புடைய தாக்குதல் அல்ல, மாறாகப் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்பட்ட மோதல் என்றும் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபயணத்திற்கு உதவிய நபர் ஒருவரை, சிலர் ஹெல்மெட்டால் தாக்கியதாக தித்தகல்ல ஆனந்தசிறி தேரர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்தே பொலிஸார் இந்த விளக்கத்தை அளித்துள்ளனர்.
இருப்பினும், ஆரம்பக்கட்ட விசாரணைகளில் காயம் அடைந்த நபருக்கும் இந்த நடைபயணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும், அவர் தனது சொந்த வேலைக்காக லொறியில் பயணித்தபோதே இச்சம்பவம் நடந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின்படி, வீதியவத்த தேவாலயத்திற்கு அருகில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் போது, அவருக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு பின்னர் ஹெல்மெட்டால் தாக்கும் அளவுக்கு மாறியுள்ளது.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வத்துபிடிவல வைத்தியசாலையிலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கம்பஹா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த நபரின் காயங்களைப் படம்பிடித்த ஆனந்தசிறி தேரர், அவரை நடைபயண ஆதரவாளர் போலச் சித்தரித்து வீடியோ பதிவு செய்துள்ளதாகப் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால், இச்சம்பவத்திற்கும் நடைபயணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ள பொலிஸார், சமூக வலைத்தளங்கள் மூலம் பொய் பரப்புரையை மேற்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பான அறிக்கையை வீரகொட பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய பொய் அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோக்கள் மற்றும் தகவல்களைப் பகிரும்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



