நீதிமன்றங்களின் இறுதித் தீர்ப்புகளை மட்டுமே அரசாங்கம் ஏற்கும் – அதற்கு அப்பால் (பொதுமன்னிப்புபோன்ற) வேறு தீர்வுகளை யாரும் எதிர்பார்க்க வேண்டாம் ; ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவிப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொதுமன்னிப்பு வழங்குவது குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு அரசு மதிப்பளிக்கும் என்றும் நீதித்துறை விவகாரங்களில் தலையிடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நீதிமன்றங்களின் இறுதித் தீர்ப்புகளை அரசு ஏற்கும் என்றும், நிறைவேற்றுத்துறை அதனை மாற்றியமைக்கும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.
நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றும் என்றும், காவல்துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் bribery commission போன்ற நிறுவனங்கள் விசாரணைகளை நடத்தும் என்றும் அவர் விளக்கினார்.
எனினும், சட்டத்தை விளக்கி நடைமுறைப்படுத்தும் இறுதி அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே உண்டு என்பதை அவர் வலியுறுத்தினார்.
“உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கும்போது, சிலர் அதனை நீக்க வேண்டும் என்று கோரி கத்துகிறார்கள்.
இதுபோன்ற சட்டங்களுடன் ஒரு நாடு எவ்வாறு இயங்க முடியும்?” என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு அரசு மதிப்பளித்து அதன்படி நடக்கும் என்றும், அதற்கு அப்பால் தம்மிடமிருந்து வேறு தீர்வுகளை யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற சில துறவிகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு மத்தியிலேயே ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



